Published : 27 Mar 2019 07:34 PM
Last Updated : 27 Mar 2019 07:34 PM
மற்றவர்களைப் போல நான் பஞ்சம் பிழைக்க வந்தவனல்ல என்று தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் களைகட்டிய நிலையில், சில தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக மாறிவிட்டன. ஓபிஎஸ் முதன்முதலாக தனது மகனை மக்களவை வேட்பாளராகக் களமிறக்கும் தொகுதி தேனி. அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் ஓபிஎஸ் ரவீந்திரநாத்துக்கு எதிராகக் களமிறங்கி உள்ளார். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் அங்கே போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''என்னைப் பார்த்துச் சொல்கிறார்கள். இளங்கோவன் அந்நியன், ஈரோட்டில் இருந்து வந்தவன் என்று. ஆம் ஈரோட்டில் இருந்துதான் வந்தேன். அங்கிருந்துதான் தமிழகத்தில் சமூகப் புரட்சி வெடித்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
நான் மற்றவர்களைப் போல ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவன் அல்ல. பஞ்சம் பிழைக்க வந்துவிட்டு, பெரியகுளம், தேனி மாவட்டம் என்று முடிந்த இடங்களையெல்லாம் வாங்கிச் சுருட்டும் அயோக்கியன் அல்ல.
தயவுசெய்து என்னைச் சீண்டாதீர்கள் நண்பர்களே.. மோடி சாதனைகளைப் பற்றிப் பேசுங்கள். நீங்கள் எதாவது சாதனை செய்திருந்தால் அதைச் சொல்லி வாக்கு கேளுங்கள்.
அரசியல் பேசுங்கள்; அரசியல் ரீதியாக உங்களைச் சந்திப்பேன். என்னைத் தனிப்பட்ட முறையில் சீண்ட வேண்டுமென நினைத்தால், ஆஸ்திரேலியாவும் தெரியும், சிங்கப்பூரும் தெரியும். இவ்வளவுதான் சொல்வேன். இதற்கு மேலும் ஆழமாகச் சொல்ல வேண்டுமெனில், பிஞ்சிலே பழுத்த பழமாக உள்ளவர்கள் விளையாட வேண்டாம்'' என்றார் இளங்கோவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT