Published : 23 Mar 2019 10:55 AM
Last Updated : 23 Mar 2019 10:55 AM
தேனி மாவட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அழைத்துச் செல்லப்படு வதால் விவசாயப் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.
தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. பெரியாறு, சோத்துப்பாறை, வைகை அணை போன்ற நீராதாரங்களின் மூலம் மாவட்டத்தின் பல பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. திராட்சை, மா, தென்னை, பூ, காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விவசாயத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச் சாரத்துக்காக அதிக அளவில் தொழிலாளர்களை கட்சியினர் அழைத்துச் செல்கின்றனர். பொதுக்கூட்டம் மட்டுமின்றி பிரச்சாரப் பணிகள், வீடுவீடாகச்சென்று வாக்கு சேகரிப்பது, கொடி பிடித்து கோஷமிடுவது போன்ற பணிகளிலும் இத்தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு பிரியாணி, மது, பணம் என கட்சியினரின் கவனிப்பு அதிகமாக இருப்பதால், பலர் விவசாய வேலைக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். மற்றும் சிலரோ, கட்சி பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்தால் வரும் காலத்தில் தங்களின் கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கட்சியின் பிரச்சாரப் பணிக்கு வருகின்றனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சார வேலைக்குச் செல்வதால், மாவட்டத்தில் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஏற்கெனவே விவசாயக் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், இருக்கும் கணிசமான தொழிலாளர்களும் தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்சியினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெரிய விவசாயிகள், இயந்திரங்களை வைத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு சமாளித்து விடுவார்கள். ஆனால், கூலி தொழிலாளர்களை நம்பியுள்ள சிறு, குறு விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT