Published : 29 Mar 2019 09:41 AM
Last Updated : 29 Mar 2019 09:41 AM
* மதுரை வண்டியூர் ரிங் ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்துப் பிரச்சாரக் கூட்டம் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலையில் கடும் வெயில் கொளுத்தியதால் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் யாரும் சேர்களில் அமரவில்லை. இதனால் மேடையில் இருந்த தலைவர்கள் சேர்களில் வந்து அமரும்படி அறிவுறுத்திக் கொண்டேயிருந்தனர். ஸ்டாலின் வந்துவிட்டார் என்று சொன்ன பிறகுதான் சேர்களில் வந்து அமர்ந்தனர்.
* முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஸ்டாலின் வருகைக்காக மேடையில் காத்திருந்தனர். சரியாக 10.50-க்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அவரை தொண்டர்கள் புடைசூழ வர வேற்றனர். மேடையேறிய ஸ்டாலின் கூட்டத் தினரைப் பார்த்துக் கும்பிட்டார். காத்திருந்த ப.சிதம்பரம், மேடையேறிய ஸ்டாலினிடம், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் ஊழி யர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
* மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகி ருஷ்ணன் பேசும்போது, மதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை எடைபோட்டுப் பார்த்தால் எதிரணி வேட்பாளர் தகரத்துக்கு ஒப்பானவர், நமது வேட்பாளர் தங்கத்துக்கு நிகரானவர் எனக் குறிப்பிட்டார்.
* வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசும்போது, சுட்டெரிக்கும் வெயிலில் கூட்டம் போட்டால் தொண்டர்கள் வருவார்களா எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். சூடு, சொரணையற்றவர்களின் ஆட்சியை அகற்ற சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கதிரவனின் மகனைப் (மு.க.ஸ்டாலின்) பார்க்க தொண்டர்கள் திரண்டு வருவார்கள் எனப் பதில் கூறினேன். அதுபோல் தொண்டர்கள் திரளாக வந்துள்ளனர்.
* மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவருவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரயில் வருவதற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.
* ஸ்டாலின் மேடைக்கு வந்தவுடன் கூட்டத்தின் மத்தியில் இருந்து 90 வயது மூதாட்டி மேடை நோக்கி வந்தார். ஸ்டாலினைப் பார்த்து இருகரம் கூப்பி கும்பிட்டார். மேடையில் இருந்தவாறு மூதாட்டிக்கு ஸ்டாலின் ‘கை’ கொடுத்து வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். கட்டாயம் கை கொடுப்பேன் எனவும், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT