Published : 20 Mar 2019 08:41 AM
Last Updated : 20 Mar 2019 08:41 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி.
இத்தொகுதியில் 1951-ல் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியும் (இரட்டை உறுப்பினர்), காங்கிரஸ் கட்சி 8 முறையும், தலா 2 முறை திமுக, அதிமுக, தமாகாவும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 1991-ம் ஆண்டு அதிமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மணிசங்கர் அய்யரை எதிர்த்து திமுக சார்பில் குத்தாலம் கல்யாணம் போட்டியிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சிகளான தமாகா, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டன.
இதனால் தொடர்ந்து 28 ஆண்டுகள் திமுக சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் யாரும் போட்டியிடாததால், 28 ஆண்டுகளாக இத் தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்காக உதயசூரியன் சின்னம் வரையப்படாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ செ.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறியபோது, “கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுத்து கட்சியின் சின்னமான உதயசூரியனையே மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. இம்முறை திமுகவுக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர் அறிவிக் கப்பட்டுள்ளதால் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளோம்” என்றனர்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டலத்தில் திமுக- அதிமுக நேரடியாக மோதும் ஒரே தொகுதி மயிலாடுதுறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT