Published : 04 Mar 2019 08:56 AM
Last Updated : 04 Mar 2019 08:56 AM
விருதுநகரில் 6-ம் தேதி நடக்க உள்ள திமுக தென் மண்டல மாநாடு, ‘பெருந்திரள் பொதுக் கூட்டம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிகிறது.
திமுகவின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் மார்ச் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் கடந்த 20-ம் தேதி நடந்தது. இதில் திமுக தென் மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இது திமுகவின் தென் மண்டல மாநாடு என்று கட்சியின் மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அப்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், ‘திமுக தென் மண்டல மாநாடு’ என்பது ‘பெருந்திரள் பொதுக்கூட்டம்’ என்று நேற்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
விருதுநகர் அடுத்த பட்டம்புதூரில் 6-ம் தேதி நடக்க உள்ள இக்கூட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்களைத் திரட்ட தென் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், விருதுநகர் - சாத்தூர் நான்குவழிச் சாலையில் திமுக பெருந்திரள் பொதுக் கூட்டத்துக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மேடை மட்டும் அமைக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடத்தப்பட உள்ளது. இத்திடலில் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளன.
புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் இதுவரை 32 தொகுதிகள் முடிவான நிலையில், பட்டம்புதூர் பொதுக் கூட்டத்துக்கு முன்பாகவே, எஞ்சிய 8 தொகுதிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுவிடும் என கூறப்படுகிறது. இதனால் 40 தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் அடுத்த பட்டம்புதூரில் திமுக பெருந்திரள் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT