Last Updated : 27 Mar, 2019 08:20 AM

 

Published : 27 Mar 2019 08:20 AM
Last Updated : 27 Mar 2019 08:20 AM

காங்கிரஸின் 72 ஆயிரம் நிதித் திட்டம் நாட்டைப் படுகுழியில் தள்ளும்: நாராயணன் திருப்பதி பேட்டி

எந்தத் தொலைக்காட்சி சேனலைத் திருப்பினாலும் பாஜகவின் குரலாக ஒலிப்பவர் நாராயணன் திருப்பதி. தேர்தல் நெருங்க நெருங்க அக்கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு உள்ளாவது பற்றிப் பேசுகிறார் பாஜகவின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளரான நாராயணன் திருப்பதி.

‘உங்கள் ஓட்டு மக்களைப் பிரிக்கும் பாஜகவுக்கா? மக்களை ஒருங்கிணைக்கும் எங்களுக்கா?’ என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறதே?

இந்த நாட்டிலேயே மதச்சார்பற்ற ஒரு கட்சி இருக்குமானால் அது பாஜக மட்டும்தான். என்றைக்குமே நாங்கள் பிற மதத்தினரைக் குறை சொன்னதோ, மற்ற மத நம்பிக்கைகளில் தலையிட்டதோ கிடையாது. ஆனால், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாகக் கருதி, தொடர்ந்து பெரும்பான்மை சமூகத்தவர்களைப் புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டது வரலாறு. உதாரணத்துக்கு, கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஜாகோபைட், ஆர்தோடக்ஸ் பிரிவினருக்கிடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்தது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

அது மதம் சார்ந்த, உணர்வு சார்ந்த விவகாரம் என்றும் அதில் தலையிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அதே கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை விவகாரத்தில் அவசரமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம் என்று துள்ளிக்குதித்தது மதச்சார்பின்மையா? எனவே, வாக்குகளுக்காக மக்களைப் பிரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பாஜகவைவிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கே அதிகம் பொருந்தும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு பாஜக ரூ.6 ஆயிரம் அறிவித்தால், காங்கிரஸ் ரூ.72 ஆயிரம் அறிவித்திருக்கிறதே?

காங்கிரஸின் அறிவிப்பு துக்ளக் தர்பாரைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இது செயல்படுத்தப்பட்டால், 10 ஆயிரத்துக்குக் குறைவாக சம்பளம் பெறும் பிரிவில் இருப்போரில் பெரும்பாலானோர் வேலைக்கே போக மாட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் வீழும், பணவீக்கம் அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் கண்மூடித்தனமாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது.

தினகரன், திருமா, சீமான் போன்றோருக்குக் கேட்ட சின்னத்தைக் கொடுக்காத தேர்தல் ஆணையம், பாஜக கூட்டணியில் உள்ள வாசனுக்கு விரும்பிய சின்னத்தைக் கொடுத்தது சர்ச்சையாகியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு கட்டுப்படுத்துகிறதா?

இது மிகத் தவறான குற்றச்சாட்டு. தங்களது ஆணைக்கு இணங்கவில்லை என்றதும், தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சாட்டுவது சில கட்சிகளின் வழக்கமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x