Published : 26 Mar 2019 04:08 PM
Last Updated : 26 Mar 2019 04:08 PM

பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்கள் உணவு டெலிவரி செய்கின்றனர்: தயாநிதி மாறன் விமர்சனம்

பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்ப்பதாக, மத்திய சென்னை திமுக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

தயாநிதி மாறன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஷெனாய் நகரில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தேர்தல் என்றவுடன் பிரதமர் மோடி வாரவாரம் தமிழகத்திற்கு வந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நான்கரை ஆண்டுகளாக மோடி எங்கே போனார்?

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது தான் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை.

மதச்சார்பற்ற  முற்போக்குக் கூட்டணி நிச்சயம் அமையும். அப்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், குறிப்பாக மத்திய சென்னைக்கு பயனுள்ள திட்டங்கள் கொண்டு வரப்படும்.

பாஜக ஆட்சியில் பொறியியல் படித்த இளைஞர்களுக்கு மாத சம்பளம் 8,000 ரூபாய் தான். ஆனால், முந்தையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொழில்நுட்பத் துறையில் புரட்சி நடைபெற்றது. அப்போது இளைஞர்களுக்கு 40,000 - 50,000 ரூபாய் மாத சம்பளம் கிடைத்தது. இந்த ஆட்சியில், படித்த இளைஞர்கள் தங்களின் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலை செய்கின்றனர். ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்கின்றனர். இந்த நிலை மாறி வேலைவாய்ப்பு பெருகிட வேண்டும்.

அம்பானி, அதானி, நீரவ் மோடி ஆகியோருக்கு மட்டுமே மோடி காவலராக உள்ளார். அவர் இந்தியாவுக்கு காவலர் இல்லை. பாஜகவுடன் அடிமைக் கூட்டணியை அதிமுக அமைத்திருக்கிறது.

சென்னையில் தலைதூக்கியிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கும், மின்வெட்டுப் பிரச்சினைக்கும் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை".

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x