Published : 09 Mar 2019 02:56 PM
Last Updated : 09 Mar 2019 02:56 PM
விருதுநகரில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாடு கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க திணறுகின்றனர் திமுகவினர்.
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக தென்மண்டல மாநாடு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டை மார்ச் 3-ம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்று மகா சிவராத்திரி என்பதால் கூட்டத்தை சேர்க்க முடியாது எனக் கருதி 6-ம் தேதி அமாவாசையன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாநாட்டை தென் மண்டல மாநாடு என்று அறிவித்த திமுகவினர், பின்னர் அதை முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி எனத் தலைப்பிட்டு பொதுக்கூட்டமாக நடத்தினர். பல ஆயிரம் பேர் இதில் பங்கேற்றாலும் அது வழக்கமாகக் கவனித்து அழைத்து வரப்பட்ட கூட்டம் தான் என்கிறார்கள் அக்கட்சியினர்.
இக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுவார் என கட்சியினரிடையே ஆர்வம் இருந்தது. ஆனால் புதிய அறிவிப்போ, போட்டியிடும் தொகுதி, வேட்பாளர் தேர்வு குறித்து வெளியிடப்படாதது திமுகவினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில், 5 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும், அதை ஸ்டாலின் அறி விப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீர்மானமோ அல்லது முக்கிய முடிவுகள் குறித்தோ ஸ்டாலின் பேச்சு இல்லை என்பதால் திமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் திமுக போட்டியிடும் தொகுதியில் தங்கள் தொகுதி இடம்பெறும் என்ற ஆவலில் 9 தென் மாவட்ட கட்சிப் பொறுப்பாளர்களும் போட்டிபோட்டு பலத்தைக் காட்டும் வகையில் கூட்டத்தை திரட்டினர். ஆனால், தொகுதி அறிவிப்புக்கூட இல்லாததால் அவர்களும் ஏமாற்றம் அடைந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
விருதுநகரில் 2004-ல் நடத்தப்பட்ட திமுக மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்றது. இதைப்போல் இந்த முறையும் விருதுநகரில் மாநாட்டை நடத்தினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் குறிப்பாக திராவிடக் கட்சியாக இருந்தபோதும் அமா வாசை நாள் பார்த்து திமுக மாநாடு நடத் தப்பட்டுள்ளது.
2004 மக்களவைத் தேர்தலில் கோயில்களில் பலி கொடுக்கத் தடை, பூசாரிகள் கைது, மதமாற்ற தடைச் சட்டம், வேலை நியமனத் தடைச் சட்டம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டது மழைநீர் சேகரிப்பு இல்லாவிட்டால் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மறுக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் அன்றைய அதிமுகவுக்கு வாக்குகள் சரிந்தன. இது திமுகவுக்கு சாதகமான வாக்குகளைப் பெற்றுத்தந்தது.
ஆனால், 2004-ம் ஆண்டு விருதுநகரில் நடந்த திமுக மாநாடுதான் 40-க்கு 40 வெற்றியைத் தந்தது என்றும், அதனால், இம்முறையும் விருதுநகரில் மாநாட்டை நடத்தினால் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுகவினர் உறுதியாக நம்புகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT