Published : 05 Mar 2019 12:27 PM
Last Updated : 05 Mar 2019 12:27 PM

பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியை தோற்கடிக்க வேண்டிய அரசியல் தேவை இருக்கிறது. திமுக கூட்டணியில் 2 தொகுதிகளுடன் உடன்பாடு செய்துகொள்வதெனவும், 40 தொகுதிகளிலும் இணைந்து பணியாற்றுவது எனவும் தீர்மானித்து திமுக தலைமையிடம் தெரிவித்தோம். அதனடிப்படையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல் வந்தால் திமுகவை ஆதரிப்போம் என்று ஏற்கெனவே தீர்மானித்திருந்தோம்" என, கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளுமா என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "திமுக தலைமையிலான கூட்டணியில் எங்கள் கட்சி பங்கேற்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை" என்றார் பாலகிருஷ்ணன்.

ஏற்கெனவே திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10, விசிகவுக்கு 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x