Published : 19 Mar 2019 10:47 AM
Last Updated : 19 Mar 2019 10:47 AM
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்துவதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸாரின் திடீர் போர்க்கொடியால் வேட்பாளர் அறிவிப்பு மேலும் தாமதமாகி வருகிறது.
காங்கிரஸ் தொண்டர்களை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற பெருமை பெற்றது கன்னியாகுமரி. தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவுக்கு உள்ள ஒரே எம்.பி. தொகுதியும் இதுவே. இதனை, இம்முறை தாங்கள் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்ப உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
ஏற்கெனவே எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் ராபர்ட்புரூஸ், பொன் ராபர்ட்சிங் மற்றும் மாவட்ட தலைவர்கள் என, பலர் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களம் இறங்குபவர்கள் கிறிஸ்தவ வேட்பாளராக இருக்கவேண்டும் என்றும் காங்கிரஸார் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு மத்தியில் கடந்த 13-ம் தேதி ராகுல்காந்தி நாகர்கோவில் வந்தபோது, நிர்வாகிகள் பலர் போட்டி போட்டு கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவற்றில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் வகையில் எச்.வசந்தகுமாரும், ரூபி மனோகரனும் செயல்பட்டனர். இதனால், இவர்களே பெரும்பாலும் வேட்பாளராக அறிவிக்கப்படுவர் என காங்கிரஸார் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இது ஒருபுறமிருக்க, அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை போட்டி போட்டு அறிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால் வேட்பாளர் யார் என தெரியாததால், குமரி தொகுதி உட்பட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு பரபரப்பாக உள்ளது.
இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவே காங்கி ரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதற்கும் தாமதம் என கூறப்படுகிறது.
பிற மாவட்டத்தில் தொழிலதிபர்களாக இருப்பவர்களை, கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சி நடந்து வரு கிறது. இவர்களுக்கு வேண்டா வெறுப்பு டன்தான் காங்கிஸ் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள். குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெளி மாவட்டங்களில் வசிப்போரை வேட் பாளராக அறிவிக்கக்கூடாது. உள்ளூரில் 25 ஆண்டுகளாவது கட்சிக்காக உழைத்த வரில் ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்கின்றனர் உள்ளூர் காங்கிரஸார்.
வேட்பாளர் விஷயத்தில் குமரி காங்கிரஸாரின் திடீர் போர்க்கொடியால் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT