Published : 01 Mar 2019 11:44 AM
Last Updated : 01 Mar 2019 11:44 AM
தென்மாவட்டங்களில் அதிமுக தற்போதே பணத்தை வாரி வழங்கி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அமமுகவினரும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டநிலையில் திமுக ஆமை வேகத்தில் செயல்படுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் கூட்டணி ஓரளவு முடிவாகிவிட்டன. திமுக, அதிமுக அணியில் இடம்பெறும் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தேமுதிக மட்டுமே எந்தப் பக்கம் சாய்வது என்று மதில் மேல் பூனையாக நிற்கிறது.
இம்முறை தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, டிடிவி.தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மையம் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் ஐந்து முனை போட்டி ஏற்படுவது உறுதியாகிவிட்டது.
ஜெயலலிதா இருந்தபோது தென் தமிழகத்தில் திமுகவை விட அதிமுக வலுவாகவே இருந்தது. அவரது மறைவுக்குப் பின் தென் தமிழகத்தில் முதல் முறையாக அதிமுக ஒரு மிகப்பெரிய தேர்தலைச் சந்திக்க உள்ளது. அதிமுகவினரின் ஒரு பிரிவினர் டிடிவி.தினகரனின் அமமுக பக்கம் உள்ளனர். அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் டிடிவி.தினகரனை தேனி மக்களவைத்தொகுதியில் போட்டி யிடுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப் படுகிறது.
டிடிவி.தினகரனுக்கு தேனி மாவட்டத்தில் ஓரளவு நல்ல செல்வாக்கு உள்ளது. ஏற்கெனவே போட்டியிட்ட அனுபவமும் இருக்கிறது. அந்த செல்வாக்குடன் அதிமுக மீதுள்ள வெறுப்பையும் அறுவடை செய்தால் தேனி தொகுதியில் வெற்றி பெறுவதோடு டிடிவி.தினகரன் போட்டியிட்டால் தென் தமிழகத்தில் அமமுக அதிமுகவைவிட பெரும் வாக்கு வங்கியைப் பெறலாம் என அக்கட்சியினர் கணக்குப்போட்டுள்ளனர்.
ஆனால், டிடிவி.தினகரன் அதை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைந்தபோது சசிகலா, அவரது குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு தற்போது இல்லை. டிடிவி.தினகரனின் சாதுர்யமான பேச்சுத்திறமை, அரசியல் செயல்பாடுகள் பொதுமக்களிடம் வரவேற்பு பெறத்தொடங்கி உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், செய்தித் தொடர்பாளர் புகழேந்தி உள்ளிட்டோர் தென் மாவட் டங்களில் தொடர் சுற்றுப்பயணம் மேற் கொண்டு பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச் சிகளில் பங்கேற்று அக்கட்சியினரை உற் சாகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஆட்சியும், கட்சியின் இரட்டை இலை சின்னமும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் வசம் இருப்பதால் அதிமுகவின் அடித்தட்டு ஓட்டுவங்கி, டிடிவி.தினகரனுக்கு கிடைக் குமா? என்று தெரியவில்லை. அதிமுகவைப் பொருத்தவரையில் 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளில் ஈடுபட ஆரம் பித்துவிட்டனர். ‘பூத்’ கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியலைப் பெற்று அதனடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு வழங்கிய ரூ.1000-மும், தற்போது அறிவி த்துள்ள ரூ.2 ஆயிரம் நிதியுதவியும் அடித்தட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. மதுரை மாநகர், புறநகர் மாவட்டங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோரின் மூவர் கூட்டணியின் தேர்தல் பணிகள் மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.
தினமும் ஏதாவது ஒரு தொகுதியில் அதிமுக பொதுக்கூட்டம், சைக்கிள் பேரணி, கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்று இந்த மூவர் அணியினர் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், திண்டுக்கல் தவிர மற்ற மாவட்டங்களில் திமுகவினர், அதிமுக, அமமுகவுக்கு போட்டியே கொடுக்காமல் மந்தமாகவே இருக்கின்றனர்.
மதுரையில் அழகிரி சென்றபிறகு திமுகவில் யாரும் இன்னும் தலை யெடுக்கவில்லை. பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ, மூர்த்தி எம்எல்ஏ ஆகியோரின் செயல்பாடுகள் மட்டுமே திமுகவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. காங்கிரஸ் எதைப்பற்றியும் கவலை ப்பட்டதாக தெரியவில்லை. திமுக கூட்டணியின் வெற்றியோ, தோல்வியோ அது திமுகவை மட்டுமே சார்ந்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் சத்தமில்லாமல் தற்போதே தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கமலின் மக்கள் நீதி மையம் செயல்பாடு தேர்தல் நேரத்திலே தெரிய வாய்ப்புள்ளது.
திமுகவினர் கூறுகையில், ‘‘திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வைப் பற்றிக்கூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், தேர்தல் செலவுக்குப் பணம் கொடுப்பார்களா? மாட்டார்களா? என்பதுதான் கட்சியினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி வரை திமுக மேலிடம், வாக்காளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தேர்தல் செலவுக்குக்கூட பணம் தரவில்லை. அதுவும் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம்.
ஆனால், அதிமுகவினரோ கடந்த முறைபோல் தற்போதும் பணத்தை தண்ணீராகச் செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். தேர்தலுக்குப் பணம் என்பது அடிப்படை விஷயமாகிவிட்டது. ஆனால், அதைப் பற்றிய கவலை திமுக மேலிடத்தில் இல்லை.
கடந்த முறையைப்போல் இந்த முறையும் வெற்றியை கோட்டை விட்டுவிடுவார்களோ? என்று அச்சம் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT