Published : 22 Mar 2019 03:26 PM
Last Updated : 22 Mar 2019 03:26 PM
ஆண்ட கட்சி, ஆளும் கட்சியை மக்கள் வெறுக்கிறார்கள், மீத்தேனைக் கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சி. கையெழுத்து போட்டவர் ஸ்டாலின் என டிடிவி தினகரன் கூறினார்.
சென்னையில் அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியதாவது:
''எல்லோரும் அங்கீகரிக்கப்படாத கட்சி, சுயேட்சை என்றெல்லாம் சொல்கிறார்கள். 25-ம் தேதிதான் நாங்கள் கேட்டுள்ள குக்கர் சின்னம் கிடைக்குமா? என்கிற நிலையில் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் போட்டியிட ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளதைப் பார்க்கிறீர்கள்.
இந்தக் கடுமையான போட்டிக் காலத்தில் ஒரு மெகா கூட்டணி, பயில்வான் கூட்டணி இருக்கும் நிலையில் தனித்து நின்று நாங்கள் களம் காண்கிறோம். பெண் வேட்பாளர்களை அறிவிக்க முயற்சி செய்தோம். ஆனால் நிறையபேர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நிற்கத்தான் விரும்புகிறார்கள்.
தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் நிற்க ஆசைப்பட்டார். நான்கூட அங்கு நிற்க ஆசைப்பட்டேன். அவரை நான்தான் தேனி மக்களவைத் தொகுதியில் நிற்கச்சொன்னேன். இஸ்லாமியர் ஒருவரை நிற்கச்சொன்னார்கள்.
புதுச்சேரி, ஓசூரில் கொஞ்சம் சிக்கல் உள்ளது. இறுதிப் பட்டியலில் அறிவித்து விடுவேன். இந்தத் தேர்தலில் வியூகம் என்று ஒன்றுமில்லை. மக்கள்தான் தீர்மானிப்பார்கள். பணம், விஐபி எல்லாம் இந்தத் தேர்தலை தீர்மானிக்காது.
அரித்மெடிக், கூட்டணி கணக்கு எல்லாம் தேர்தலில் நிற்காது. ஆர்.கே.நகரில் நடந்தது என்ன? ஆகவே அதெல்லாம் செய்தியாளர்கள் எழுதுவது.
2014-ல் காங்கிரஸ் அரசு அதற்கு முன் இருந்ததால் கோபம் இருந்தது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவளித்தார்கள். ஆகவே தற்போது பாஜக மீது கோபம் உள்ளது. நிச்சயம் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டுப் பிரச்சினையில் தேசியக் கட்சிகள் தீர்வைக் கொண்டு வரமுடியாது. காவிரி பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக நிலை என்ன? எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால்தான் மாநிலப் பிரச்சினைகளுக்கு மாநிலக் கட்சிகள்தான் போராடும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
2014-ல் ஜெயலலிதா உறுதியாகப் போராடுவார் என்கிற எண்ணத்தால்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தார்கள். அவர் வென்று பிரதமர் ஆக மாட்டார் என மக்களுக்குத் தெரியாதா? ஆனால் அவர் மாநில உரிமைக்காகப் போராடினார். அவர் இருக்கும் வரை நீட் தேர்வை நடத்த முடிந்ததா?
உ.பி.யில் எப்போதும் மாநிலக் கட்சிகள் மீதுதான் நம்பிக்கை வைப்பார்கள். தமிழகத்திலும் அதுதான் நிலை. நமது மாநிலத்தைப் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு மூலம் ஆட்சிக்கு வருபவர்களை தமிழக நலனுக்காக செய்ய வைக்க வேண்டும். எனக்கு டெலிகாம் மந்திரி வேண்டும், பவர்ஃபுல் அமைச்சர் வேண்டும் எனக் கேட்பதற்காக அல்ல.
அதிமுகவினரால் 8 தொகுதிகளைக் கண்டிப்பாக வெல்லவே முடியாது. கண்டிப்பாக அந்த ஆட்சி தலைகுப்புறக் கவிழப் போகிறது. யாரும் கவிழ்க்க வேண்டாம் தானாக அது நடக்கும்.
திமுக கூட்டணி முழுவதும் சேர்ந்து பாஜகவை எதிர்க்கிறது. ஆனால் மோடி அமமுகவைத்தான் எதிர்க்கிறார். இது பட்டிதொட்டியெங்கும் அனைவருக்கும் தெரியும். கலைராஜன் என்கிற பெரிய தலைவர் போயிருக்கிறார். அவர்தான் அமமுக மீது கருத்துவேறுபாடு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே.
அவர் ஒன்றரை ஆண்டுகாலம் செயல்படாமல்தான் இருந்தார். அவர் என்ன செய்தார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அவர் திருச்சி போனவுடன் தூக்கிவிட்டோம்.
மக்களவைத் தேர்தலுக்குப்பின் மதச்சார்பற்ற பிரதமரை ஆதரிப்போம். அதை காங்கிரஸ் என ஏன் எடுத்துக் கொள்கிறது? மம்தா இல்லையா, மாயாவதி இல்லையா இவர்கள் பிரதமராக வரமாட்டார் என நாம் ஏன் முடிவு செய்யக்கூடாது.
மக்கள் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிமீது கடுமையாக வெறுப்பில் உள்ளனர். உதாரணத்திற்கு மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி அதற்கு தமிழகத்தில் கையெழுத்து போட்டவர் ஸ்டாலின். ஆகவே மக்களுக்கு அனைத்தும் தெரியும்''.
இவ்வாறு தினகரன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT