Last Updated : 29 Mar, 2019 08:39 AM

 

Published : 29 Mar 2019 08:39 AM
Last Updated : 29 Mar 2019 08:39 AM

தேர்வு நேரத்தில் மாணவர்களைக் கொண்டு தேர்தல் பரப்புரை: சின்னசேலம் பகுதி பெற்றோர் முகம் சுளிப்பு

100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது-

தேர்தல் ஆணைய அலுவலர்களாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியரைக் கொண்டு ‘வாக்களிக்கும் வைபோகம்' எனும், தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதில் பங்கேற்கும் மாணவர்கள், விழிப்புணர்வு பதாகையுடன் வீதி வீதியாக சென்று, வாக்களிக்கும் அவசியத்தை வாக்காளர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். காலை தொடங்கி மாலை வரை இந்த நிகழ்ச்சிகள் பகுதி பகுதியாக நடைபெறுகின்றன.

அந்த வகையில், கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 200 மாணவ, மாணவியரைக் கொண்டு சின்னசேலத்தில் வட்டாட்சியர் இந்திரா தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தேர்தல் அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வாக்களிக்கக் கூடியவர்கள் 18 வயது நிரம்பியவர்கள். அவர்களுக்கான விழிப்புணர்வைத் தர சிறுவர், சிறுமியரை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

தற்போது பள்ளிகளில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், மாணவர்களை வேறு சில பணிகளுக்கு ஈடுபடுத்துவது தவறு. கடந்தாண்டு வரை 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இந்த ஆண்டு முதல் அனைவரும் தேர்ச்சி என்ற முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க பள்ளிக்கு அனுப்பியிருக்கும் சூழலில் அவர்களை, வெயிலில் வீதி வீதியாக அழைத்துச் செல்வது சரியான செயலா? நாள் முழுக்க மாணவர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்திவிட்டு அவர்களுக்கு பிஸ்கட்டை தூக்கி வீசுகின்றனர். இவர்கள், ஏன், தனியார் பள்ளிகளை அணுகி இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அப்பள்ளி மாணவர்களை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை எதற்கு வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மனோபாவம் அரசு அதிகாரிகள் மத்தியில் உள்ளது, இந்த போக்கு மாறவேண்டும் என்று ஆதங்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமியிடம் கேட்டபோது, "தேர்தல் ஆணைய நிகழ்ச்சிகளில் மாணவர்களை அழைத்துச் செல்ல எவரும் அனுமதி கோரவில்லை. தேர்வு நேரத்தில் அனுமதிக்கவும் மாட்டோம்'' என்கிறார்.

மாவட்ட தேர்தல் அதிகாரியான சுப்ரமணியத்திடம் கேட்டதற்கு, "தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை அழைக்க வாய்ப்பில்லை. அவ்வாறு அழைத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறோம்'' என்றார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய வட்டாட்சியர் இந்திராவிடம் கேட்டபோது, "ஒரு நல்ல நோக்கத்திற்காக பள்ளி தலைமையாசிரியரை அணுகி கேட்டோம். அவர் அனுமதியின் பேரில் தான் பேரணி நடத்தப்பட்டது. வந்திருந்த மாணவர்களுக்கு பிஸ்கட்டும் தண்ணீரும் வழங்கினோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x