Published : 29 Mar 2019 07:51 AM
Last Updated : 29 Mar 2019 07:51 AM
இருப்பிட முகவரி, வாக்குப்பதிவு மையங்கள் ஒதுக்கீட்டில் தொடரும் குளறுபடிகளால் வாக்களிக்க முடியாமல் பல ஆண்டுகளாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு, வரும் ஏப். 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த பிப். 23 மற்றும் 24-ம் தேதிகளில், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஏற்கெனவே பட்டியலில் உள்ளவர்களுக்கு முகவரி மாற்றம் செய்தல், வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் உயிழந்தவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப் பட்டதா என்பதை https://electoralsearch.in என்ற இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வாக்காளரின் சட்டப் பேரவைத் தொகுதி, பெயர், பாலினம், வாக் காளர் அடையாள அட்டை எண், தந்தை அல்லது கணவர் பெயர், பாகம் எண் மற்றும் பெயர், வரிசை எண், வாக்குப்பதிவு மையம், தேர்தல் தேதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அவற்றில் வழக்கம் போல் முகவரி, வாக்குப் பதிவு மையம், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் மாறி யுள்ளதாக வாக்காளர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோவைப்புதூரைச் சேர்ந்த வாக்காளர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் கோரி பலமுறை விண்ணப்பித்தும், இன்னும் மாற்றப்படாமல் உள்ளது. கடந்த பிப். 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெற்ற முகாமிலும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பம் செய்தோம். அதன்பின்னர் தேர்தல் ஆணைய இணையதளத்தில் சென்று சரிபார்த்த போது, முகவரி மாற்றம் செய்யப்படவில்லை. நாங்கள் பொள்ளாச்சி மக்களவைத்தொகுதிக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்கம்பட்டி யில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் ஒதுக்கப் பட்டுள்ளதாக இணை யதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் எப்படி அங்கு சென்று வாக்களிக்க முடியும்? இதுபோன்ற குளறுபடிகளால் பல வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் வாக்களிப்பதைத் தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதனால் வாக்களிக்கும் ஆர்வமும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே தேர்தல் ஆணையம் இதுபோன்ற குளறுபடிகளை களைந்து வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல்களில் பல ஆண்டுகளாக வாக்களித்து வரும் வாக்காளர்கள் பலருக்கும், வாக்காளர் அடையாள அட்டை இன்னும் கிடைக்கவில்லை. வாக்காளர் முகாம்களில் விண்ணப் பிக்கும் போது, அடையாள அட்டைக்கும் சேர்த்தே புகைப்படங்கள் பெறப்படுகின்றன. ஆனால் அடையாள அட்டை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கேட்டால் விரைவில் கிடைத்துவிடும் என்று பதில் அளிக்கின்றனரே தவிர, இன்னும் கிடைக்கவில்லை. பல்வேறு ஆவணங்களைப் பயன் படுத்தி வாக்களிக்கலாம் என்று கூறும் அதிகாரிகள், வாக்காளர் அடையாள அட்டைகளை முறையாக பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார், போத்தனூரைச் சேர்ந்த வாக்காளர் ஜி.வெங்கடேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT