Published : 22 Mar 2019 09:17 AM
Last Updated : 22 Mar 2019 09:17 AM
தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் தாமிரபரணியின் கரையோரத்தில் இருக்கிறது திருநெல்வேலி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களை உள்ளடக்கிய பெருமை கொண்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் முக்கியப் பாதுகாப்பு மையங்களைக் கொண்ட தொகுதி இது. விஜயநாராயணம் ஐஎன்எஸ் கடற்படை தளம், மகேந்திரகிரியில் ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகம் உள்ளன. கூடங்குளம் அணு உலை அமைந்திருப்பதும் இந்தத் தொகுதியில்தான்.
பொருளாதாரத்தின் திசை: இத்தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் விவசாயமும், பீடி தொழிலும். பருவமழை பெய்து, அணைகளிலும் குளங்களிலும் நீர் பெருகினால் மட்டுமே நெல், வாழை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட முடிகிறது. மழை பொய்த்துப்போனால் விவசாயமும் பொய்த்துவிடுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பீடித் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமாக 5 லட்சம் பீடித் தொழிலாளர்களைக் கொண்டது திருநெல்வேலி. பீடி நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துவருவதால், பல தொழிலாளர்கள் வேலையிழந்துவருகிறார்கள். கங்கைகொண்டான் தொழிற்பேட்டை, நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், பேட்டை, வள்ளியூர் சிட்கோ தொழிற்பேட்டைகள் ஆகியவை பெயரளவுக்கு இருக்கின்றன. போக்குவரத்து வசதியும் போதுமான அளவுக்கு இல்லை.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: ரயில்வே துறையில் இத்தொகுதி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்கா, நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டங்கள் அரைகுறையாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. வேலை வாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் சென்னை, பெங்களூரூ போன்ற பெருநகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம். இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சர்களாக
இருந்தவர்களும், எம்.பிக்களும் தொழில் துறை முன்னேற்றத்துக்கு எதையும் செய்யவில்லை என்பது தொகுதி மக்களின் பெரும் குறை.
நீராதாரத்துக்கான அணைக்கட்டுகளையோ, நீர்வரத்துக் கால்வாய்களையோ தூர்வாராமலும், மராமத்து செய்யாமலும் விட்டுவிட்டதும், தாமிரபரணி பராமரிப்பின்றிக் கிடப்பதும் விவசாயத்தை அழிவுக்கு இட்டுச்செல்கின்றன. சாதி மோதல்களால் உயிரிழப்புகள், பொதுச்சொத்துகள் சேதம் என்று பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அரசியல் தலைவர்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் மக்களின் ஆதங்கம்.
நீண்டகாலக் கோரிக்கைகள்: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திலுள்ள ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை. ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இருந்தும் மின்பாதைக்கான கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவுக்கு ஏற்படுத்தாததால், அதிக உற்பத்தி காலங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. தாமிரபரணியிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும்
தண்ணீரை, வறண்ட பகுதிகளுக்குக் கொண்டுசெல்லும் வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டம் நிறைவேறவில்லை. பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2010-ல் ரூ.25 கோடி செலவில் தொடங்கப்பட்ட குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலப் பணிகளும் இன்னும் முடிந்தபாடில்லை. இவை எப்போது நிறைவேறும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஒரு தகவல்: இம்முறை அதிமுக சார்பில் மனோஜ்பாண்டியன், திமுக சார்பில் ஞானதிரவியம், அமமுக சார்பில் ஞானஅருள்மணி ஆகிய கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நாடார் சமுதாயத்தைத் தவிர்த்து வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் களத்தில் நிறுத்த முக்கியக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தயக்கம் காட்டுவதன் வெளிப்பாடு இது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இந்தத் தொகுதியில் நாடார் சமூகத்தினர் பங்கு 25% என்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்திவருகின்றன. பட்டியலினச் சமூகத்தினர் 18% இருக்கும் நிலையில் அவர்களின் வாக்குகளும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. முக்குலத்தோர், வெள்ளாளர்கள், யாதவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த திருநெல்வேலி தொகுதி, பின்னர் அதிமுக வசம் வந்தது. 1977, 1984, 1989, 1991, 1998, 1999, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக இரண்டு முறையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியில் அதிமுக சார்பில் 4 முறை வெற்றிபெற்ற கடம்பூர் ஜனார்த்தனமும், காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற தனுஷ்கோடி ஆதித்தனும் மத்திய இணையமைச்சர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 15,26,645
ஆண்கள் 7,49,193
பெண்கள் 7,77,452
மக்கள்தொகை எப்படி?
மொத்தம் 24,61,784
ஆண்கள் 11,98,328
பெண்கள் 12,63,456
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 78%
கிறிஸ்தவர்கள்: 11%
முஸ்லிம்கள்: 10%
பிற சமயத்தவர் 1%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 82.50%
ஆண்கள் 89.24%
பெண்கள் 75.98%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT