Published : 12 Mar 2019 11:13 AM
Last Updated : 12 Mar 2019 11:13 AM

ஜெ.வைவிட எடப்பாடியின் அணுகுமுறை சிறப்பு; ரஜினி, கமலைவிட விஜய்யின் தாக்கம் அதிகம்: அன்புமணியை பிராண்டிங் செய்த வல்லுநர் பேட்டி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணியை வித்தியாசமாக பிராண்டிங் செய்த அரசியல் மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் ஜான் ஆரோக்கியசாமி.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் குமாரசாமி பெங்களூரு நகரில் அதிக வெற்றிகள் பெறக் காரணமாக இருந்த குழுவுக்குத் தலைமை வகித்தவர். சிவசேனாவுக்காக மகாராஷ்டிராவிலும் பணியாற்றியுள்ளார். அவரிடம் தமிழக சூழல், எடப்பாடி பழனிசாமியின் தலைமை, புது முகங்களின் வருகை, தேசிய அரசியல் குறித்து அவரிடம் பேசினோம்.

திமுக கொள்கை ரீதியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆளும் அதிமுக பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தினகரனும் கமல்ஹாசனும் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த அணி வெற்றி வாகை சூடும்?

இம்முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. அது அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் இரு பெரும் கட்சிகளுமே கூட்டணி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. திமுக கூட்டணி மோடி எதிர்ப்புக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கிறது. தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அதிகம் இருப்பது இதற்கு உதவும். அதே நேரம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி, பணம், பாமக, தேமுதிக கட்சிகளின் கூட்டணி ஆகியவை அதிமுக கூட்டணிக்கு உதவும். இதனால் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் 50 -50 என்ற அளவில் இருக்கும்.

கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் எப்படி இருக்கவேண்டும்? எந்த வகையிலான உத்திகளை அவர்கள் கையாள வேண்டும்?

வருங்காலத்தில் அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரவேண்டிய நிலை ஏற்படும். இதனால் பிரச்சாரங்களில் எதிர்க் கட்சிகளைத் தாக்கிப் பேசும்போது நாகரிகமாக விமர்சிக்க வேண்டும்.

இணைய உலகில் எந்த நொடியில் வேண்டுமாலும் கடந்த காலப் பேச்சுகளை எடுத்துப் பார்க்க முடியும். இதன்மூலம் வாக்காளர்களிடையே நம்பகத்தன்மையை இழக்காமல் இருக்க முடியும். களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அதேநேரம் காலத்துக்குத் தகுந்தாற்போல தொழில்நுட்பத்திலும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்துத்துவா ஆதரவு பெருகியிருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறதே, இது உண்மையா?

ஆம், தென் மாவட்டங்களில் இந்துத்துவாவுக்கான ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் வேண்டுமானால் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு இருக்கலாம். அதன் நிலைமை வேறு, கள சூழல் வேறு. சொல்லப்போனால் சமூக வலைதளங்களிலும் தமிழகத்தில் இருந்து இந்துத்துவக் குரல்கள் அதிகம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அதிகாரம் மிக்க திராவிடத் தலைவர்கள் இல்லாததால், பாஜக தலைவர்களின் பிரச்சாரங்களும் கோஷங்களும் அதிகரித்துவிட்டன. இதனால் பாஜக ஆதரவு களத்தில் அதிகமாகி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமியின் தலைமைப் பண்பு எப்படி இருக்கிறது, மக்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்குமா?

ஜெயலலிதாவை விட சிறந்த அணுகுமுறையோடு, எளிதில் அணுக முடிகிற நபராக ஈபிஎஸ் உள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் தலைவரை நோக்கிச் சென்ற காலம்போய், தலைவர் மக்களை நோக்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

அரசியல் கட்டமைப்பின் அடித்தளம் சாதியையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. கவுண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, முக்குலத்தோருக்கு தினகரன், வன்னியர்களுக்கு அன்புமணி ஆகியோர் தலைவர்களாக உருவெடுத்துவிட்டனர். எந்தக் கட்சியில் முன்பு இருந்திருந்தாலும் 80 சதவீத கவுண்டர்கள் இப்போது எடப்பாடியை பழனிசாமியையே ஆதரிக்கின்றனர்.

முக்குலத்தோருக்கான தலைவராகத் தினகரன் உருவெடுத்துவிட்டதாகக் குறிப்பிடுகிறீர்கள். அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்தானே ஓபிஎஸ்ஸும்...

ஜெ. இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். ஜல்லிக்கட்டு, வார்தா புயலின்போது அவரின் செயல்பாடுகள் அனைத்து சமூகத்தினரிடமும் வரவேற்பைப் பெற்றன. ஆனால் தர்மயுத்தம் தொடங்கி, பிரிந்தபோதும் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தபோதும் அவர் தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். ஆனால் தினகரன் சரியான திட்டமிடலோடு பயணித்து வருகிறார். அதற்கான அடையாளம்தான் ஆர்.கே.நகர் வெற்றி.

கமல்ஹாசனின் அரசியல் வருகை, தேர்தல் களத்தில் கணிசமான மாற்றத்தை உருவாக்குமா?

கமல்ஹாசனுக்கு ஓரளவு வரவேற்பு இருக்கும். அவர் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தனக்கான வாக்கு வங்கியை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார். நிச்சயமாக அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிடமாட்டார். ஆனால் அவரிடத்தில் கொள்கை ரீதியாகத் தெளிவு இல்லை. நடப்பு அரசியலில் அவருக்குப் பிரச்சினை உள்ளது. திராவிடக் கட்சிகளில் என்ன கொள்கை இருந்தது என்று கேட்கக்கூடாது. ஏனெனில் தலைவர்களே அங்கு கொள்கைகளாக இருந்தனர்.

 

அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று அறிவித்துக் கொண்டே இருக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்குமா?

ரஜினிகாந்தும் கிட்டத்தட்ட கமல் போலத்தான். சாதி, மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் மட்டுமே கமல், ரஜினிக்கான பலமாக இருக்கும். சொல்லப்போனால் அவர்கள் இருவரையும்விட, நடிகர் விஜய்யின் மாஸ் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் அரசியலில் ஆர்வமில்லை என்று அறிவித்ததால், அவரின் ரசிகர்கள் தேர்தல் போட்டியில் ஒதுங்கிவிட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 1.5 கோடி இளைஞர்களின் வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கும்?

அவர்களுக்கான தலைவர் என்னும் இடத்தில் யாருமே இல்லை. வெற்றிடமே உள்ளது. தங்கள் தொகுதி வேட்பாளர்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையைப் பொறுத்து இளைஞர்கள் முடிவு செய்யலாம். வாக்களிக்காமலே கூட இருந்துவிடலாம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு வாக்குறுதி, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றால் மத்திய அரசு பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி நல்ல முறையில் தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்திரா காந்தியின் சாயலில் இருக்கும் பிரியங்கா காந்தியும் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேசிய அளவில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ஒரு மாதத்துக்கு முன் பாஜக வர வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. பாஜக சார்பில் மோடிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றுகூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசின் திட்டங்கள், புல்வாமா தாக்குதலால் நிலைமை மாறியுள்ளது. பாஜக மீண்டும் வரவேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ், அதை விமர்சிக்காமல் கூட்டாக உழைக்கிறது. பாஜகவுக்கு தேசியவாதம் என்னும் கருப்பொருள் ஆணித்தரமாக இருக்கிறது. இது தேர்தலில் முக்கியப் பங்குவகிக்கும்.

அடுத்தபடியாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமாக இல்லை. வலிமையான தலைவருக்கு (மோடி) எதிரான தனிநபர் யார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. இதனால் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளது. அடுத்த வாய்ப்பாக காங்கிரஸ், மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம். மொத்தத்தில் பணத்தின் தாக்கம் பரவலாக இருக்கும். பிரச்சார உத்திகளும் வாக்குகளாகக் கனியும். அதைப் பொறுத்து முடிவுகள் மாறும்.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x