Last Updated : 02 Mar, 2019 09:33 AM

 

Published : 02 Mar 2019 09:33 AM
Last Updated : 02 Mar 2019 09:33 AM

மோடி மீண்டும் பிரதமர் ஆவதுதான் முக்கியம்; பாஜகவுக்கு 5 தொகுதி ஒதுக்கியதில் வருத்தம் இல்லை: மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததில் எந்த வருத்தமும் இல்லை. 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடியே வேட்பாளர் என நினைத்து பணியாற்றுவோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

கடந்த 1998-ம் ஆண்டிலேயே பாஜகவுக்கு 6 தொகுதிகளை ஜெய லலிதா ஒதுக்கினார். இப்போது 5 தொகுதிகள் மட்டுமே உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வருத்தம் இல்லையா?

கூட்டணி, தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வப்போது உள்ள சூழல்களே தீர்மானிக்கின்றன. அதிமுக வுக்கு 37 எம்.பி.க்கள் உள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும்போது அனைவருமே விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். வெற்றிதான் முக்கி யம். பாஜகவைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடியே வேட் பாளர் என நினைத்து பணியாற்றுவோம். எனவே, 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததில் எந்த வருத்தமும் இல்லை.

தேமுதிகவும், புதிய தமிழகமும் அதிமுக கூட்டணிக்கு வருமா, வராதா?

தேமுதிகவும், புதிய தமிழகமும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட, மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதை விரும்புகிற கட்சிகள். எனவே, இந்த இரு கட்சிகளும் அதிமுக - பாஜக கூட்டணியில் கட்டாயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் என திமுக கூட்டணியும் பலமாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

கட்சிகளின் எண்ணிக்கை மட்டுமே வெற்றியை தந்துவிடாது. திமுக கூட்டணி யில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி யான காங்கிரஸ் கடந்த 2014-ல் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. மற்ற கட்சிகளுக்கு தலா 1 சதவீத வாக்குகள்கூட இல்லை. வாக்கு சதவீதம், மக்கள் செல்வாக்கு, பிரதமர் வேட்பாளர், கூட்டணி பலம் என எந்த வகையில் ஒப்பிட்டாலும் அதிமுக அணியே பலமாக இருக்கிறது. எனவே, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணியே வெல்லும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சி யில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவ தாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனவே?

கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சி யில் பல்வேறு திட்டங்களுக்காக தமிழகத் துக்கு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கி திட்டம், மருத்துவக் காப்பீடு, கழிப்பறைகள் கட்டுதல், இலவச சமையல் எரிவாயு இணைப்பு என மத்திய பாஜக அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், அதில் தமிழகம் அதிக பலன் அடைந்துள்ளது.

ஏராளமான நன்மைகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பூர், சென்னையில் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரி மருத்துவமனைகள், பாதுகாப்புத் துறை வழித்தடம், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் என தமிழகத் துக்கு மோடி ஆட்சியில் கிடைத்த நன்மைகள் ஏராளம்.

இதுபோல 2004 முதல் 2014 வரையி லான 10 ஆண்டுகால காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைத்த நன்மைகளை பட்டியலிட மு.க.ஸ்டாலின் தயாரா? நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி, மீத்தேன், நியூட்ரினோ என அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங் கள். இது தகவல் தொழில்நுட்ப யுகம். இனியும் ஸ்டாலின் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. தமிழக மக்கள் அமோக ஆதரவு அளித்து மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவார்கள்.

ராணுவத்தின் வீரதீரச் செயல்களை அரசியலாக்கி தேர்தல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாரே?

தேசபக்தியுள்ள அனைவரும் மோடியை பிரதமராக மட்டுமே பார்ப் பார்கள். ஆனால், தேசப் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில்கூட மோடியை எதிரியாகவே ஸ்டாலின் பார்ப்பது கடும் கண்டனத்துக்குரியது.

நம்பகத்தன்மை அதிகரிப்பு

மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களால் உலக அரங்கில் இந்தியா மீதான நம்பகத்தன்மை அதிகரித் துள்ளது. தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தன் இரண்டே நாளில் விடுவிக்கப் பட்டிருப்பது மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி. இந்திய அரசு போரை விரும்பவில்லை. அதேநேரம், எதிரி அடித்தால் வாங்கிக் கொண்டு இருக்கவும் முடியாது. மோடிக்கு மக்களிடம் உள்ள அபரிமித மான செல்வாக்கு, ஸ்டாலின் போன்ற வர்களை தடுமாறச் செய்வதில் ஆச்சரி யம் இல்லை. அதனால்தான், இதுபோன்ற வர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

இம்ரான் கானிடம் இருந்து மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியிருக்கிறாரே?

குஷ்புவிடம் இருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. குஷ்பு சொல்வதை எல்லாம் முதலில் காங்கிரஸ் தலைமை ஏற்கிறதா என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும். மோடியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு, தாய்நாட்டுக்கு எதிராக, பாகிஸ் தானுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் வருகிறதே, தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?

கண்டிப்பாக போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். தூத்துக்குடி என்றாலும் தயாராகவே இருக்கிறேன். முன்பு திருச்செந்தூர் தொகுதியாக இருந்தது முதலே இது, பாஜகவுக்கு செல்வாக்கான தொகுதி. இப்போது கூட்டணி பலம் இருப்பதால் வெற்றி உறுதி.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x