Published : 05 Mar 2019 01:11 PM
Last Updated : 05 Mar 2019 01:11 PM

மதிமுகவுக்கு 1+1, ராஜ்யசபாவுக்குச் செல்கிறார் வைகோ?- இன்று முடிவு

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு லோக் சபா, ஒரு ராஜ்யசபா தொகுதிகள் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைகோ ராஜ்யசபா மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக மதிமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

தளபதியும் போர்வாளும் இணைந்து ஓரணியில் என்று கடந்த வாரம் மு.க.ஸ்டாலின் மதிமுக நடத்திய கூட்டத்தில் பேச நெகிழ்ந்து போய் கண்கலங்கினார் வைகோ.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருந்த பொழுது அவரைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உங்களுக்கு எப்படி துணை இருந்தேனோ அப்படியே ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்று கூற கருணாநிதி நெகிழ்ந்து போனார் என்று அப்போது வைகோ பேட்டி அளித்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்த வைகோ அடுத்த முதல்வராக ஸ்டாலின் தான் வர வேண்டும். அதற்கு நான் துணை நிற்பேன் என்று பகிரங்கமாக மேடையில் அறிவித்தார். அதன் பின்னர் தொடர்ந்து திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் மதிமுக பங்கேற்றது. அதேபோன்று மதிமுக நடத்தும் போராட்டங்களில் திமுகவும் பங்கேற்றது

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திமுக, அதிமுக அணிகள் கூட்டணியை இறுதி படுத்தும் முயற்சியில் வேகம் காட்டி வருகின்றன. தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டு வர இரண்டு கட்சிகளும் மாறி மாறி முயற்சி எடுக்கிறது.

அதிமுக தலைமையிலான அணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளும் பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி, முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இருப்பது மதிமுகவும், மமகவும் மட்டுமே. மமகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு வருவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஆனால் திமுக கூட்டணியிலேயே பிரதான கட்சி என கருதப்படும் மதிமுக ஏற்கெனவே தங்களுக்கு ஐந்து தொகுதிகள் வேண்டும் என்று கூறி வந்தது.

மதிமுகவுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. மற்ற கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் மதிமுகவுக்கும் 2 தொகுதிகள் என்பது வைகோவுக்கு சற்று வருத்தத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் அதனுடன் சேர்ந்து ஒரு ராஜ்ய சபா தொகுதியைத் தருவதாக திமுக தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குகிறோம். நீங்கள் ராஜ்ய சபா எம்.பி.யாக ஆக வேண்டும் உங்கள் சேவை நாடாளுமன்றத்துக்குத் தேவை என வைகோவிடம் திமுக தலைமை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தொகுதி ஒன்றும், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ராஜ்யசபாவில் எம்.பி.யாக ஒன்றும் மதிமுகவுக்குத் தருகிறோம் என திமுக தரப்பில் வைக்கப்பட்டதற்கு மதிமுக தரப்பில் 2+1 என தாருங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2 நாடாளுமன்றத் தொகுதிகளை உங்களுக்கு அளிக்கிறோம். ஆனால் யாருக்கும் தராத வாய்ப்பாக ஒரு ராஜ்யசபா, ஒரு நாடாளுமன்றத் தொகுதி நீங்கள் கேட்பதை தருகிறோம். அதில் நீங்கள் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் 2+1 என்றால் இரண்டிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறீர்களா? என கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மதிமுக இதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. திமுக தரப்பில் எங்களுக்கும் சிரமம் உள்ளது. அதே நேரம் உங்களுக்கு உரிய கவுரவம் அளிக்கவே ராஜ்யசபா எம்.பி. தொகுதியை தருகிறோம் என பேசப்பட்டதாகவும், இதை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்ட மதிமுக இன்று உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் இதை தெரிவித்து அனுமதி வாங்குகிறார்.

ஆகவே நாளையே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மற்ற கட்சிகள்போல் 2 நாடாளுமன்றத் தொகுதிகளை வாங்கிக்கொள்வதா? 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெறுவதா அல்லது ஒரு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்ய சபா எனும் திமுகவின் யோசனையை ஏற்றுக்கொள்வதா? என்பது இன்று முடிவாகும்.

பெரும்பாலும் திமுக யோசனை, வைகோ ராஜ்யசபா செல்வது போன்ற அடிப்படையில் 1+1 என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்குழுவில் வைகோ பேசுவார் என மதிமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு உறுதியானால் வைகோ ராஜ்யசபா எம்.பி.ஆக வாய்ப்ப்புள்ளது. மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது.

ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x