Published : 30 Mar 2019 09:23 AM
Last Updated : 30 Mar 2019 09:23 AM

ஆளுநர் கிரண்பேடியை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது 3 வழக்குகள் பதிவு

ஆளுநர் கிரண்பேடியை தரக்குறைவாக பேசியதாக திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது தவளக்குப்பம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடந்த 27-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். தவளக்குப்பம் பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்தார்.

இதுகுறித்து பாஜகவின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் மாநில தேர்தல் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மேலும், புகாருக்கு ஆதாரமான நாஞ்சில் சம்பத்தின் பிரச்சார சிடியையும் சமர்ப்பித்தார். தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, மாவட்ட தேர்தல் அதிகாரி அருண், டிஜிபி சுந்தரி நந்தா ஆகியோரிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதனிடையே புதுச்சேரி உள்துறை செயலரும், துணைநிலை ஆளுநரின் சார்பு செயலருமான சுந்தரேசன் ஆளுநர் குறித்து அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சுந்தரி நந்தாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி சுந்தரி நந்தா தவளக்குப்பம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான போலீஸார் நேற்று நாஞ்சில் சம்பத் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பெண்ணின் பாலினம் சம்பந்தமாக கொச்சைப்படுத்துதல், பெண்ணின் தன்மான உணர்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x