Published : 20 Mar 2019 10:13 AM
Last Updated : 20 Mar 2019 10:13 AM

முதல் தேர்தல்: சில துளிகள்

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. தேர்தல் நடத்தை நெறிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 16 மக்களவைத் தேர்தல்கள் நடந்துவிட்டன. இருந்தாலும் முதல் பொதுத் தேர்தல் நடந்த காலம், பின்னணி, வசதி-வாய்ப்புகளைப் பார்க்கும்போது அது பெரிய இமாலய சாதனையாகவே இப்போதும் தோன்றுகிறது.

முதல் பொதுத் தேர்தல் 4 மாதங்களுக்கு (25.10.1951 – 21.2.1952) 68  கட்டங்களாக நடத்தப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் மக்களவையுடன் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது வாக்குரிமைக்கான வயது 21. ஏழை-பணக்காரர், படித்தவர்- படிக்காதவர், சாதி வேறுபாடு என்று எதுவும் பார்க்கப்படாமல் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது இந்திய அரசியல் வரலாற்றின் மாபெரும் திருப்புமுனை. 36 கோடி மக்களில் 17.3 கோடிப் பேர் வாக்காளர்கள். 85% மக்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதால் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குப் பெட்டிகள் வெவ்வேறு வண்ணங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டி மீது வேட்பாளரின் பெயர்களும், சின்னமும் எழுதி ஒட்டப்பட்டன.

பனிக்காலம் வந்துவிட்டதால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்காது என்பதால் இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தேர்தல் நீண்ட கால இடைவெளிகளில் வெவ்வேறு மாதங்களில் நடந்தது.  1951-ல் முதலில் இமாசலத்தில் சினி என்ற இடத்தில் முதல் வாக்குப் பதிவு நடந்தது. அம்மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரத்திலும் பிப்ரவரி-மார்ச் 1952-ல் தேர்தல் நடந்தது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டிருந்தாலும் 1967 வரையில் அங்கு

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை, சட்டப் பேரவைத் தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டது.

அப்போது மக்களவையில் மொத்தம் 489 தொகுதிகள். 2 பேர் ஆங்கிலோ இந்தியர்களின் பிரதிநிதிகளாகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். 489 தொகுதிகளில் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 86 இரட்டை உறுப்பினர் தொகுதிகள். ஒரேயொரு தொகுதியில் மட்டும் 3 பேர் உறுப்பினர்கள். சமூகத்தின் ஒடுக்கப்பட்டோருக்கும் போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக இப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு தொகுதியில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வருகிறவரே வெற்றியாளர் என்ற முறை இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவுக்காவது வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதேபோல வாக்களிப்பது வாக்காளர்களின் விருப்பத்துக்குரியது. முதல் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சராசரி 45.7%. பதிவான வாக்குகளில் காங்கிரஸுக்குக் கிடைத்தது சுமார் 45% வாக்குகள், வென்ற தொகுதிகள் 364.

முதல் பொதுத் தேர்தலின்போது அமைச்சரவையிலிருந்து விலகிய சியாம பிரசாத் முகர்ஜி, ‘பாரதிய ஜன சங்’ என்ற கட்சியையும் அம்பேத்கர் ‘பட்டியல் இனத்தவர் சம்மேளனம்’ என்ற கட்சியையும் தொடங்கினார். இக்கட்சி பின்னர் குடியரசு கட்சி என்று பெயர்மாறியது.  முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களில் அம்பேத்கர், ஜே.பி. கிருபளானி இருவரும் தோல்வியைத் தழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x