Published : 25 Mar 2019 04:42 PM
Last Updated : 25 Mar 2019 04:42 PM
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற இரண்டு தொகுதிகளில் தருமபுரியும் ஒன்று. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார்.
பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ள தொகுதி. கூட்டணி பலத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் பாமக செல்வாக்குடன் இருப்பதால் வெற்றி அல்லது இரண்டாவது இடத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
பாமக | அன்புமணி | 4,68,194 |
அதிமுக | மோகன் | 3,91,048 |
திமுக | தாமரைச்செல்வன் | 1,80,297 |
காங் | ராமசுகந்தன் | 15,455 |
1989-ம் ஆண்டு தேர்தல் முதலே பாமக இங்கு தனது வாக்கு வங்கியை நிரூபித்து வருகிறது. பாமக சார்பில் பாரிமோகன், பு.த.இளங்கோவன், செந்தில் என பலர் இங்கு எம்.பி.யாக இருந்துள்ளனர். மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்படி ராமமூர்த்தியும் இத்தொகுதியில் போட்டியிட்டு முன்பு எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார்.
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2-ம் இடம் |
1977 | வாழப்பாடி ராமமூர்த்தி | பொன்னுசாமி, ஸ்தாபன காங் |
1980 | அர்ஜூனன், திமுக | பூவராகவன், ஜனதா |
1984 | தம்பிதுரை, அதிமுக | பார்வதி கிருஷ்ணன், சிபிஐ |
1989 | எம்.ஜி.சேகர், அதிமுக | பு.த.இளஙகோவன், பாமக |
1991 | தங்கபாலு, காங் | பு.த.இளங்கோவன், பாமக |
1996 | தீர்த்தராமன், தமாகா | சுப்பிரமணியம், காங் |
1998 | பாரிமோகன், பாமக | தீர்த்தராமன், தமாகா |
1999 | பு.த.இளங்கோவன், பாமக | கே.பி.முனுசாமி, அதிமுக |
2004 | செந்தில், பாமக | பு.த.இளங்கோவன், பாஜக |
2009 | தாமரைச்செல்வன், திமுக | செந்தில், பாமக |
தமிழகத்தில் அதிக அளவு கிராமப்புறங்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்று தருமபுரி. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் தேர்தலில் சாதியக் கணக்குகள் அதிகம் எடுபடும் தொகுதியாகவும் தருமபுரி இருந்து வருகிறது.
பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் விவசாயம் மட்டுமே ஒரே தொழிலாக இருந்து வருகிறது. பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் கூலித்தொழிலாளர்களாக செல்ல வேண்டிய நிலையிலேயே இந்தப் பகுதி மக்கள் உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு அன்புமணி வென்றபோதிலும், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிலைமை வேறானது.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில், தருமபுரி, பென்னாகரம் ஆகிய 2 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. மேட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் தொகுதிகளில் அதிமுக வென்றது.
எனினும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக இந்தத் தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. பென்னாகரம் தொகுதியில் அன்புமணி 57,975 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
பாப்பிரெட்டிப்பெட்டியில் பாமக வேட்பாளர் சத்தியமூர்த்தி, 61,092 வாக்குகளையும், தருமபுரியில் பாமக வேட்பாளர் செந்தில் 55,946 வாக்குகளையும் பெற்றனர். மேட்டூரில் பாமக தலைவர் ஜி.கே. மணி, 49,436 வாக்குகளையும் பெற்றனர். இதை தவிர பாலக்கோட்டில் 31,480 வாக்குகளையும், அரூர் தொகுதியில் 27,621 வாக்குகளையும் பாமக பெற்றது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளராக அன்புமணி மீண்டும் களமிறங்கியுள்ளார். திமுக சார்பில் செந்தில் குமார் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் பாப்பிரெட்டிப்பெட்டி முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான பழனியப்பன் போட்டியிடுகிறார்.
பாமகவுக்கு என்று தனியாகவுள்ள வாக்கு வங்கியும், அதிமுகவின் வாக்குகளும் அன்புமணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. அதேபோல் திமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு உள்ள வாக்கு வங்கி கூடுதல் பலமாக உள்ளது.
பழனியப்பன் இந்தப் பகுதியில் செல்வாக்கு உள்ள தலைவர் என்பதால் அவரும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும். குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியை அவர் அசைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது. அன்புமணி தனது சொந்த செல்வாக்கை நிரூபிப்பாரா அல்லது கூட்டணி பலத்துடன் திமுக கடும் சவாலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT