Published : 28 Mar 2019 10:02 AM
Last Updated : 28 Mar 2019 10:02 AM
திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் செல்லும்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி, நடந்துசென்றவாறே வாக்கு சேகரித்தார்.
தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து பெரியகுளத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதை முடித்தவர், சாலை மார்க்கமாக மதுரை வந்து கொண்டிருந்தார்.
அப்போது உசிலம்பட்டி பகுதியில் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கினார். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, வீதிகளில் சுமார் 1 கி.மீ தூரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் கைகுலுக்கிக்கொண்டே சிரித்துப் பேசினார். கைக்குழந்தைகளுடன் இருந்த பெண்களும் அவரிடம் ஆர்வத்துடன் கைகுலுக்கினர்.
அதேபோல இளைஞர்களுடன் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவருடன் தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ். இளங்கோவனும் உடன் சென்றார். கட்சி நிர்வாகிகளும் ஸ்டாலின் மற்றும் இளங்கோவனுடன் சென்றனர்.
சிலர் ஸ்டாலினுக்குச் சால்வை போர்த்தி, காலில் விழுந்தனர். சிறுவர்கள் சிலரையும் நலம் விசாரித்தார் ஸ்டாலின். ஸ்டாலின் முன்னால் செல்ல, அவரின் பிரச்சார வாகனம் பின்னால் மெதுவாக ஊர்ந்து வந்தது.
பெரியகுளத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுத் திரும்பிய ஸ்டாலின், திடீரென சாலையில் சுமார் 1 கி.மீ. நடந்துசென்று வாக்கு சேகரித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT