Last Updated : 14 Mar, 2019 05:56 PM

 

Published : 14 Mar 2019 05:56 PM
Last Updated : 14 Mar 2019 05:56 PM

அதிமுகவை அச்சுறுத்தும் 5 தொகுதிகள்: கூட்டணி பலம் கைகொடுக்குமா?

அதிமுக பெரிதும் எதிர்பார்க்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், குறைவான வாக்கு வித்தியாசம், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஓரணியில் திரளும் ஆபத்து போன்ற காரணங்களால் 5 தொகுதிகள் அந்தக் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் எனத் தெரிகிறது.  

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை, 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 10க்கும் அதிகமான  தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

பூந்தமல்லி (தனி),  பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி),  ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி),  நிலக்கோட்டை (தனி),  திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனி), ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), சாத்தூர் பரமக்குடி (தனி), விளாத்திகுளம் ஆகிய 18 தொகுதிகளில் தான் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சில தொகுதிகள் அதிமுகவுக்கு நெருக்கடியைத் தரும் தொகுதிகளாக உள்ளன. அதேசமயம் கூட்டணிக் கட்சிகளால் சில தொகுதிகள் கூடுதல் பலமாகவும் அமைந்துள்ளன.  

அச்சுறுத்தும் 5 தொகுதிகள்

பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 11,763 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிமுக வேட்பாளர் ஏழுமலை பெற்ற வாக்குகள் 1.03,952 ஆகும். பரந்தாமன் திமுக வேட்பாளர் 92,189 வாக்குகள் பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் ஆதரவுடன் போட்டியிட்ட மதிமுக 15,051 வாக்குகள் பெற்றது. இதை திமுக வாக்குகளுடன் சேர்த்தால் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்படும். எனினும் இந்த தொகுதியில் பாமக 15,827 வாக்குகள் பெற்றது இந்த வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில்  519 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்  வெற்றிவேல் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் இடதுசாரிக் கட்சிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10,281 வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக 4582 வாக்குகளையும் பாமக 3685 வாக்குகளையும் மட்டுமே பெற்றது. கடந்த தேர்தலில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவு அளித்தது. எனவே இந்தத் தேர்தலிலும் கடும் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.

திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டட அதிமுக வேட்பாளர் கோதண்டபாணி 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள்  70,215. திமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெற்ற வாக்குகள் 69,265.  ஆனால் இந்தத் தொகுதியில் பாமக 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், 28,125 வாக்குகள் பெற்றது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகள் இணைந்த மக்கள் நலக்கூட்டணி 25,539 வாக்குகள் பெற்றது. எனவே இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கும் சூழல் உள்ளது.

அரூர் தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகன் 11,421 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மூன்றாவது இடம் பிடித்த விசிக உள்ளட்ட கட்சிகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணி  33 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றது. பாமக 27,747 வாக்குகள் பெற்றது. இந்த தொகுதியில் பாமக வாக்குகள் அதிமுகவுக்குக் கூடுதலாக கிடைத்தாலும், விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்கு வங்கி உள்ள இந்த தொகுதி அதிமுகவுக்கு சவாலாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் சுப்பிரமணி 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இங்கு அதிமுக பெற்ற வாக்குகள்  71,513. திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் 67,086 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக  25,442  வாக்குகள் பெற்றது. மதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ள இந்தத்தொகுதியில் அந்த வாக்குகள் திமுகவுக்கு சேரும்போது, அதிமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதுபோலவே விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 18,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கும் மதிமுகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதிமுகவுக்கு கடும் போட்டி ஏற்படலாம் என தெரிகிறது.

பாமக, பாஜகவால் கூடுதல் வாக்குகள்

சோளிங்கர் தொகுதியில் அதிமுக 9732 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் 3-வது இடம் பிடித்த பாமக 50,827 வாக்குகள் பெற்றது. எனவே இந்தத் தொகுதியில் பாமகவின் வாக்குகள் அதிமுகவுக்கு பலன் கொடுக்கும் என கருதப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுக சார்பில் போட்டியிட்டு 12,713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுகவைப் பின்னுக்குத் தள்ளி பாமக 61,521 வாக்குகள் பெற்றது. திமுக 56,109 வாக்குகள் மட்டுமே பெற்றது. எனவே பாமகவின் வாக்குகள் அதிமுகவுக்கு கூடுதல் பலம்.

குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளருக்கு பாமக வாக்குகள் சற்று கூடுதல் பலத்தைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

ஒசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி 22,964 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு மூன்றாவது இடம் பிடித்த பாஜக  28,850 வாக்குகள் பெற்றது. எனவே இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு பாஜக வாக்குகள் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தையா 11,389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு அதன் கூட்டணிக் கட்சியான பாஜக கடந்த தேர்தலில் 9,537 வாக்குகள் பெற்றுள்ளது. இந்தத் தொகுதியில் தினகரன் வேட்பாளரால் அதிமுகவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் பாஜகவின் வாக்குகள் கூடுதல் பலம் சேர்க்கும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x