Published : 25 Mar 2019 04:49 PM
Last Updated : 25 Mar 2019 04:49 PM

ரஃபேல் விவகாரத்தில் மோடி ஓடி ஒளிகிறார்: ஆ.ராசா தாக்கு

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஓடி ஒளிகிறார் என, நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா கடுமையாக சாடினார்.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா இன்று (திங்கள்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"மோடி அரசங்காத்தை வீழ்த்தவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பவும் தேர்தல் நடக்கிறது. இரு ஆட்சிகள் மீதும் மக்களுக்கு எதிர்மறையான எண்ணம் உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் முற்போக்கான சிந்தனை கொண்ட கூட்டணியாகும். எதிர் தரப்பில் முரண்பாடு, குழப்பம் மற்றும் சந்தர்ப்பவாதம் நிறைந்த கூட்டணி.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்ட இடத்துக்கும் அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை. காலிங்கராயன் கால்வாயில் வரும் உபரியாக வரும் நீரை குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம், காரமடை உட்பட பல பகுதிகைளை விட்டு விட்டு, ஒரு சில பகுதிகளைக் கொண்டு பெயருக்குச் செயல்படுத்தவுள்ள மோசடி திட்டமாகும்.

தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அன்புமணியை விட தரம் தாழ்ந்து யாரும் அதிமுகவினரை விமர்சிக்கவில்லை.

மத்திய அரசில் எம்.பி.யாக இருந்தால் என்ன என்ன திட்டங்கள் கொண்டு வர சாத்தியமாகுமோ, அந்த திட்டங்களை என்னால் முடிந்தவற்றைச் செய்வேன். இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற முயற்சி செய்வோம். கட்டமைப்பு வசதிகள், சாலை உட்பட என்னனென்ன சாத்தியமோ அதை நிறைவேற்றுவோம்.

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைப்பதே எங்களின் நோக்கம். இந்தத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் மோடிக்கு எதிராக உள்ளன. இதனால், அவருக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்.

புல்வாமா தாக்குதல் மூலம் அரசியல் ஆதாயம் தேட மோடி அரசு முயற்சித்தது. ஆனால், அது பலனளிக்கவில்லை.

இந்த அரசு கார்ப்பரேட் அரசாங்கம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நடத்தப்படுகிறது. அம்பானி, அதானி, டாடா, பிர்லா ஆகிய கார்ப்பரேட்டுகள் சந்தோஷமாக இருக்கச் செயல்படுகிறது. மோடி இரண்டாம் முறையாக பிரதமரானால், கார்ப்பரேட் நிறுனங்களுக்கு நாட்டை மலிவு விலைக்கு விற்று விடுவார்.

ரஃபேல் விவகாரத்தில் 'இந்து' என்.ராம் ஊழல் குறித்து எழுதி வருகிறார். இதற்கு, பதிலளிக்காமல் மோடி ஓடி ஒளிகிறார். என் மீது 2ஜி ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த போது, நான் வழக்கை எதிர்கொண்டேன். பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். நீதிமன்றத்தில் விசாரணையில் பங்கேற்றேன். என் மீதான குற்றச்சாட்டை தவறு என நிரூபித்தேன். மோடி, ரஃபேல் விவகாரத்தில் ஊழலற்றவர் என நிரூபித்தால், நானே அவரை நேரடியாக வரவேற்பேன்.

இந்த அரசு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உட்பட அனைத்து விவகாரங்களையும் மூடி மறைக்கிறது" என்றார் ஆ.ராசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x