Published : 21 Mar 2019 04:30 PM
Last Updated : 21 Mar 2019 04:30 PM

மாநகராட்சியின் செயல்பாடுகள் தேர்தலில் எதிரொலிக்குமா? - ஈரோடு கட்சிகள் எதிர்பார்ப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு, மாநகராட்சி மீதும், அரசின் மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தி சாதகமாக மாறியுள்ளது. இருப்பினும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்ற வாக்குறுதி மதிமுக வேட்பாளரால் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே ஈரோடு எம்பியாக இருந்துள்ள கணேசமூர்த்தி, மாநகராட்சி பகுதியில் பெரிய அளவில் எவ்வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்ற அதிருப்தியும் வாக்காளர்களிடம் நிலவுகிறது. மொத்தத்தில் ஈரோடு மாநகராட்சி பகுதி வாக்காளர்கள் கட்சிகளைக் கடந்து பிரச்சினைகளின் அடிப்படையில் வாக்களிப்பார்களா அல்லது ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட அரசின் திட்டங்களில் கிடைக்கும் பலன் அடிப்படையில் வாக்களிப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் அரசியல்கட்சியினர்.

ஆளுங்கட்சிக்கு தலைவலி கொடுக்கும் ஆறு பிரச்சினைகள்

* பாதாளச்சாக்கடைப்பணி, மின் வாரியப்பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி என பல்வேறு காரணங்களால், நகர் முழுவதும் தோண்டப்பட்ட சாலைகளால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நேதாஜி மார்க்கெட், கனி ஜவுளிச்சந்தைகள் அகற்றப்படும் என்ற அச்சத்தில் உள்ள வியாபாரிகளுக்கு ஆளுங்கட்சி போதுமான நம்பிக்கையைத் தரவில்லை.

* ஈரோடு அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையாத நிலையில், புறநகரில் பேருந்து நிலையம் போன்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தரும் திட்டங்கள் செயல்படுத்தவில்லை. நகரில் எங்குமே முறையான வாகன நிறுத்துமிட வசதி இல்லை.

* மாநகராட்சியில் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, குப்பை வரி போன்றவை ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்களிடம் எதிர்ப்பைப் பெற்றுள்ளன. வரிவிதிப்பில் உள்ள குளறுபடிகளைப் போக்கக்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* பாதாளச்சாக்கடைப் பணி நிறைவடைந்த பகுதிகளில், பணிகள் சரியாக மேற்கொள்ளாததால், கழிவு நீர் வெளியேறி சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகிறது. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், சாக்கடைகள் தூர்வாரப்படாததால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. குப்பைக்கிடங்கை முறையாக பராமரிக்காததோடு, இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

* பிச்சைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம் ஓடையில் இருந்து வெளியேறி காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு, தோல்கழிவு நீரால் மாசடைந்த, துர்நாற்றம் வீசும் குடிநீரையே ஈரோடு மாநகராட்சி மக்கள் அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சாயக்கழிவுகளால் நோய் பாதிப்பும் அதிகரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x