Last Updated : 01 Mar, 2019 11:50 AM

 

Published : 01 Mar 2019 11:50 AM
Last Updated : 01 Mar 2019 11:50 AM

ராமநாதபுரத்துக்கு அதிமுகவில் கடும் மோதல்: முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் விருப்பம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் எனக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராமநாதபுரம், திருவா டானை, முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை (தனி), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என 6 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தமாகா ஒரு முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், 1967-ல் சுயேச்சை வேட்பாளர் முகம்மது ஷெரீப், 1971-ல் பார்வர்டு பிளாக் வேட்பாளர் மூக்கையாத் தேவர் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தபோதே 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதி அதிமுகவுக்கு சாதகமான தொகுதி. அதனால் அதிமுகவினர் இத்தொகுதியில் போட்டியிட விரும்புகின்றனர்.

தற்போது பாஜக கூட்டணியும் உள்ளதால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான ராஜ.கண்ணப்பன், தற்போதைய மக்களவை உறுப்பினர் அ.அன்வர் ராஜா, மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, இவரது மனைவியும் அதிமுக மகளிர் அணி மாநில இணைச் செயலாளருமான கீர்த்திகா முனியசாமி, அமைச்சர் எம்.மணிகண்டனின் தந்தையும் மாவட்ட அவைத் தலைவருமான செ.முருகேசன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் முருகேசன் போட்டியிட்டு திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரனிடம் தோல்வியுற்றார். இவர்களைத் தவிர ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிலரும் அதிமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர். அதே சமயம் ராமநாதபுரம் தொகுதியைக் கைப்பற்ற பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. இது குறித்து அன்வர்ராஜா எம்.பி.யிடம், மீண்டும் போட்டியிடுவீர்களா? எனக் கேட்டபோது, கட்சி இடம் கொடுத்தால் போட்டியிடுவேன். நான் ஏற்கெனவே விருப்ப மனு கொடுத்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x