Published : 16 Mar 2019 12:38 PM
Last Updated : 16 Mar 2019 12:38 PM
ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி பண பலம் மற்றும் திமுகவினரை நம்பி இறங்கியுள்ளதாக கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை திமுக தனது கூட்டணிக் கட்சிக்கே அதிகமுறை விட்டுக் கொடுத்துள்ளது. இந்த முறையும் மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கும் முடிவில் இருந்தது. காங்கிரஸில் திருநாவுக்கரசர் போன்ற விஐபி வேட்பாளர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இக்கட்சி தனக்கு சாதகமான வேலூர் தொகுதியை இந்த முறை கேட்டுள்ளது. ஆனால் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்காக இம்முறை வேலூர் தொகுதியை விட்டுக்கொடுக்க திமுக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அதற்கு அடுத்தபடியாக தங்களுக்கு சாதகமான தொகுதி ராமநாதபுரம் என நினைத்து அதை கேட்டுப் பெற்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு நேற்று அறிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூரியர் நிறுவன தொழிலதிபர் நவாஸ் கனியை வேட்பாளராக அறிவித்தார். இக்கட்சியில் நவாஸ் கனி தான் ராமநாதபுரத்தில் போட்டியிடப் போகிறார் என ஒரு மாதமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. காதர் மொய்தீன் போன்றோரால் அதிக செலவு செய்து தேர்தலை சந்திக்க முடியாது என்பதால், கட்சித் தலைமையிடம், தேர்தல் செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறி நவாஸ் கனி சீட் பெற்றுள்ளார் என திமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2011 முதல் கட்சியின் மாநில ஆலோசகராக உள்ளார். இருப்பினும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தென்பட்டதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அவர் அறிமுகம் இல்லாதவரே. கட்சியில் இன்றைய நிலைக்கு ஏற்ப தேர்தல் செலவு செய்யவும், மண்ணின் மைந்தர் என்பதாலும் களம் இறக்கப்பட்டுள்ளார் என திமுகவினர் தெரிவிக்கின்றனர். பண பலம் மற்றும் திமுக கூட்டணியை நம்பியே நவாஸ் கனி களம் இறங்கியுள்ளார். இந்த நம்பிக்கைக்கு ராமநா தபுரம் தொகுதி மக்கள் கை கொடுப்பார்களா என்பது பொறுத் திருந்து பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT