Published : 16 Mar 2019 06:22 PM
Last Updated : 16 Mar 2019 06:22 PM

திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்பது சாதியைக் காப்பாற்றவே: பாமக தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்ப்பு

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதலாவதாக வெளியிட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மது - புகையிலை ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்களுக்காக வரவேற்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கை, பெண்கள் குறித்த வாக்குறுதி ஒன்றுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

"சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்" என்ற வாக்குறுதி தான் அது.

ஆண் - பெண் என இருபாலருக்கும் பொருந்தும் வகையிலான இந்த வாக்குறுதி, தேர்தல் அறிக்கையின் பெண்கள் பகுதியில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமகவின் அதே தேர்தல் அறிக்கையில் திருமணம் குறித்த இன்னொரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. "பெரியாரால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள சுயமரியாதை திருமணத்திற்கு அகில இந்திய அளவிலும் சட்டப்படியாக அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பாமக நடவடிக்கை எடுக்கும்" என்கிறது பாமக.

21 வயதுக்குட்பட்டவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்களின் ஒப்புதல் என்பதும், பெரியாரால் முன்மொழியப்பட்ட சுயமரியாதைத் திருமணம் என்பதும் ஒன்றுக்கொன்று முரணானது என, வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை கூறுகிறார்.

"கட்சிப் பாகுபாடின்றி பெரியாரை எல்லோரும் உருவகப்படுத்தும் அவசியம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், பாமக தங்களுடைய சாதி அரசியலை உள்ளே கொண்டு வர முயல்கின்றனர். பெரியாரால் முன்மொழியப்பட்ட சுயமரியாதைத் திருமணத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தருவோம் என பாமக சொல்கிறது. பெற்றோர்கள் சம்மதத்துடன் சுயமரியாதைத் திருமணம் செய்து வைப்பது தான் இவர்களின் எண்ணமாக உள்ளது.

ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தால், அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி கர்ணன் வழங்கிய தீர்ப்பு இருக்கிறது. ஆனால், அதே சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.என்.பிரகாஷ் அமர்வு வழங்கிய தீர்ப்பில், பதிவுத் திருமணம் செய்வதற்கு பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோரை அழைத்து வருவதற்கு எதற்கு பதிவுத் திருமணம் செய்ய வேண்டும்? 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளபோது, திருமணம் செய்ய உரிமையில்லையா? நீதித்துறையிலும் இந்த முரண் உள்ளது.

இன்றுகூட பெற்றோர்கள் இல்லாமல் பதிவுத் திருமணம் செய்ய முடியாது. அப்படியிருக்க சுயமரியாதைத் திருமணம் செய்து, பின்னர் அதன் மூலம் பதிவு செய்வது தான் காதல் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்களை சாத்தியப்படுத்தும் ஒரே வழியாக உள்ளது. 21 வயதுக்குட்பட்டவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வேண்டும் என்பது, சுயமரியாதைத் திருமணத்தையே அழிப்பது போன்றது" என்கிறார் வழக்கறிஞர் நிலவுமொழி.

திருமணத்திற்குப் பெற்றோர்களின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் என்பதற்கு, பாமக சொல்லும் காரணங்கள் இரண்டு. ஒன்று, 'நாடகக் காதலில்' இருந்து இளம்பெண்களைக் காப்பது, மற்றொன்று குடும்ப அமைப்பைப் பாதுகாப்பது. இது இரண்டுமே சாதியம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் வெளிப்படையில் இருந்து வருவது என்கிறார் நிலவுமொழி.

"பாமக 'நாடகக் காதல்' என்று சொல்வது, தலித் ஆண்கள் சாதி இந்துப் பெண்களை காதலிப்பதைத் தான் சொல்கிறது. தலித் ஆண்கள் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பெண்களை மயக்குவதாக பாமக தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. ஆனால், அவர்களுக்கு தங்களைவிட உயர்ந்த சமூகமாகக் கருதப்படும் சமூக ஆண்களை பெண்கள் காதலிப்பதில் பிரச்சினையில்லை. தலித் ஆண் காதலிப்பது தான் இவர்களுக்குப் பிரச்சினை. அதை வைத்துத்தான் நாடகக் காதல் என்ற ஒன்றை சொல்லி வருகின்றனர்.

இன்னொன்று குடும்ப அமைப்பே பெண்களை வைத்துத் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதியக் கட்டமைப்பும் அப்படித்தான். குடும்ப அமைப்பு என்பது சாதியக் கட்டமைப்பு தான். தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது முழுக்க முழுக்க சாதியைப் பாதுகாக்கின்ற ஒன்று. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் இதையொட்டி வருவது தான் பாமகவின் இந்த வாக்குறுதி" என நிலவுமொழி தெரிவிக்கிறார்.

21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்குவதை கர்நாடக உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது என பாமக தெரிவித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆதரித்திருந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 14 அன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு 12.05.2011 அன்று ஒரு தீர்ப்பு அளித்தது. அதில், "எங்களின் பார்வையில் 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண்கள் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அதற்காகப் பின்னர் வருத்தப்படுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானதாகும்" என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்குப் பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்ற வாக்குறுதிக்கு சட்டத்தின் துணையை பாமக நாடியுள்ள நிலையில், பாமகவின் இந்த வாக்குறுதி அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது என்கிறார் வழக்கறிஞர் நிலவுமொழி.

"இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பெண்களின் பாதுகாப்பு என இவர்கள் வகுக்கும் விதிமுறைகள் எதுவும் ஆண்களுக்கு இல்லை. அதனால் தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எல்லாம் நடைபெறுகிறது. காதல் திருமணத்தை ஒழித்து, தாங்கள் பார்க்கும் ஆணைத் தான் பெண் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலையைத்தான் இது ஏற்படுத்தும். சாதியைக் காப்பாற்றும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பாமக சொல்வது போன்று 'நாடகக் காதலால்' விளைந்தது அல்ல. அது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தொடர் பாலியல் வன்கொடுமை", என கூறுகிறார் வழக்கறிஞர் நிலவுமொழி.

சுயமரியாதைத் திருமணம் குறித்து பாமகவுக்கு என்னவென்றே தெரியவில்லை என, பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா கூறுகிறார்.

"இந்த வாக்குறுதியே மிக ஆபத்தானது. இதனைப் பெண்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இது பெண்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள மாபெரும் அவமானம். சுயமரியாதைத் திருமணத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பது ரொம்ப சரியான விஷயம். ஆனால், அதைச் சொல்லும் அமைப்பு, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என சொல்கிறதென்றால் பெரிய முரண் உள்ளதையே காட்டுகிறது. இதை அறியாமை என எடுத்துக் கொள்வதா எனத் தெரியவில்லை.

பெண்களுக்கு குடும்ப அமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு இல்லை என ஐநா முதற்கொண்டு பெரும்பாலான சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. குடும்ப அமைப்புக்கு உள்ளே பெண்களுக்கு உரிமைகள் இல்லை. சாதி மறுப்புத் திருமணத்துக்கான அச்சுறுத்தல் இது.

தங்களை சாதியக் கட்சியாக பாமக நிலைநிறுத்திக் கொள்வது தான் இதற்குக் காரணம். குடும்ப அமைப்பு இல்லாமல் சாதிய அமைப்பு இல்லை. அதனால், யார் சாதியைக் காப்பாற்ற நினைக்கிறார்களோ அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புவர். பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் குறித்து பாமகவுக்கு என்னவென்றே தெரியவில்லை" என்கிறார் ஓவியா.

இதுகுறித்து பாமகவின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டபோது, "திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்பது 21 வயது நிரம்பிய இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் இதனை வகுத்திருக்கிறோம். சமூக மாற்றம் காரணமாகவும், சமூக வலைதளங்கள் காரணமாகவும் இளம் வயதில் காதல் வயப்படுவது அதிகரித்து வருகிறது. வளரிளம் பருவத்தில் முடிவெடுக்க முடியாமல், வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். நிறைய விவாகரத்து வழக்குகள் வருகின்றன.

இந்த வாக்குறுதியை சாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணத்திற்கு எதிரானது என்கிறார்கள். ஏன், அந்தத் திருமணங்களை 21 வயதுக்குப் பின் செய்துகொள்ளக் கூடாது? அவர்களுக்கு ஏன் அச்சம்? 3 ஆண்டுகள் பொறுத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது?  இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான யோசனைகள், பெண்களின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்புக்காகவும் தான்.

காதல் திருமணத்தால் சாதி ஒழிந்துவிடும் என்று நினைப்பதே முட்டாள்தனமானது. பெண்கள் பாதுகாப்பை விட சாதியொழிப்பு முக்கியமா? இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றால் குடும்பம் என்கிற கட்டமைப்பு, வாழ்வியல் முறை தொடர வேண்டும். இல்லையென்றால் அடையாளத்தைத் தொலைத்து விடுவோம். பாமகவின் இந்த வாக்குறுதி, நடைமுறைக்கு ஏற்றது, அறிவியல் ரீதியானது" என்றார், வழக்கறிஞர் பாலு.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் பெருகி வருவதோடு, காதல் புரிந்ததற்காக சாதி ஆணவப் படுகொலைகளுக்கு இரையான உதாரணங்களும் கண்முன் உள்ளன.

சாதியை ஒழிக்க சாதி மறுப்புத் திருமணம் ஒன்று தான் முதலும் கடைசியுமான ஆயுதம் என்ற பெரியார், அம்பேத்கருக்கு எதிரான பாமகவின்  வாக்குறுதி, தமிழக மண்ணில் தேவைதானா என்பதை பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து யோசிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x