Last Updated : 18 Mar, 2019 04:03 PM

 

Published : 18 Mar 2019 04:03 PM
Last Updated : 18 Mar 2019 04:03 PM

தேசியக் கட்சிகள் மோதும் கன்னியாகுமரி: சவாலை எதிர்கொள்வாரா பொன் ராதாகிருஷ்ணன்?

தமிழகத்தின் கடைக்கோடி நாடாளுமன்றத் தொகுதி இது. கேரளாவில் இருந்து பிரிந்து வந்த மாவட்டம் என்பதால் கேரளத் தொடர்புகள் அதிகம். தமிழகத்தின் மற்ற அரசியல் சூழ்நிலையில் இருந்து மாறுபட்ட தொகுதி

முன்பு நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு கன்னியாகுமரி தொகுதியாக மாறியுள்ளது.

மாநிலக் கட்சிகளை விட தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதி. காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது.

பலமுறை காங்கிரஸ் வென்ற இத்தொகுதியில் பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒருமுறையும் வென்றுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் தற்போதைய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வென்றார். அவர், 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகளைப் பெற்றார்.

அதேசமயம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 2 லட்சத்து, 44 ஆயிரத்து 244 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் 1 லட்சத்து 76  ஆயிரத்து 239 வாக்குகளும் பெற்றனர்.

திமுக சார்பில் போட்டியிட்ட ராஜரத்தினம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 933 வாக்குகளும், சிபிஎம் வேட்பாளர் பெல்லார்மின் 35 ஆயிரத்து 284 வாக்குகளும், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட சுப.உதயகுமார்  15 ஆயிரத்து 314 வாக்குகளும் பெற்றனர்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இத்தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், திமுக, சிபிஎம் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடுகின்றன. அதேசமயம் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன.     

வலிமையான வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் இங்கு பலமுறை வென்றுள்ளது. 1996-ம் ஆண்டு தேர்தலில் 2-ம் இடம் பிடித்த பாஜக, 1998-ம் ஆண்டிலும் இரண்டாம் இடத்தையே பிடித்தது. 1999-ம் ஆண்டு முதன்முறையாக இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். எனினும் 2004 தேர்தலில் சிபிஎம் மற்றும் 2009 தேர்தலில் திமுகவும் இத்தொகுதியில் வெற்றி பெற்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் இங்கு மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தல்

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிலவரம் மாறியது. இங்கு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக - காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றன. நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுக இங்கு பெரும் தோல்வியைச் சந்தித்தது. இரண்டு தொகுதிகளில் 2-ம் இடம் பிடித்த அதிமுக 4 தொகுதிகளில் 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 4 தொகுதிகளில் பாஜக 2-ம் இடம் பிடித்தது.

இத்தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகியுள்ளது. அவர் தொடர்ந்து களப்பணிகளைச் செய்து வருகிறார். காங்கிரஸைப் பொறுத்தவரை வேட்பாளராக கடும் போட்டி நிலவுகிறது. வசந்தகுமார், வின்சென்ட் உள்ளிட்ட பலரும் தொகுதியைப் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்த நிலையில் எளிதில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு இந்தமுறை கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருந்ததால் பொன் ராதாகிருஷ்ணன் தன் தொகுதிக்கு சில மக்கள் நலத்திட்டங்களையும், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

இருப்பினும், மத ரீதியாக வாக்குகள் பிரியும் இத்தொகுதியில் மத்திய, மாநில அரசுகள் மீதான மக்களின் அதிருப்தி போன்றவற்றையும் எதிர்கொள்ளும் சூழலில் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளார். பாஜக எதிர்ப்பு வாக்குகள் அனைத்து ஒரே அணிக்கு செல்லும் சூழல் இருப்பதும் அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x