Published : 18 Mar 2019 11:21 AM
Last Updated : 18 Mar 2019 11:21 AM
மதுரை மக்களவைத் தொகுதியில் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு இருப்பதை நிரூபிக்கத் தவறியதால் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்து, அடுத்த கட்ட பிரச்சாரத்தைத் தொடங்க காத்திருந்த பாஜகவுக்கு மதுரையை விட்டுக் கொடுக்க அதிமுக மறுத்துவிட்டது.
அதிமுக கூட்டணியில் சேரும் முன்பே மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முடிவுடன், ‘வாக்களிப்பீர் தாமரைக்கு’ என சுவர் விளம்பரம் செய்தது பாஜக. மதுரையில் கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி மேலூர், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் பேரணி நடத்தியது, கல் உடைக்கும் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தியது.
மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டதும், பிரதமர் மோடியை மதுரைக்கு வரைவழைத்து அடிக்கல் நாட்டு விழாவையும், பிரச்சாரக் கூட்டத்தையும் நடத்தியது. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் மதுரை வந்தார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அழைத்து ஒத்தக்கடையில் பிரம்மாண்ட கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் அக்கூட்டம் நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணி யில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த பட்டியலில் மதுரை இடம்பெறவில்லை. இது, ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவிடம் மதுரை தொகுதியை கேட்டு வந்த பாஜகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கிடைக்காதது ஏன்?மதுரை மக்களவைத் தொகுதியில் முந்தைய தேர்தல்களில் பாஜக குறிப்பிட்ட சதவீத ஓட்டு பெறாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் 1996-ம் ஆண்டு பாஜக சார்பில் கலைச்செல்வன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டு தான் பாஜகவின் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுகளாகும். இந்த ஓட்டும் மதுரை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாஜக பெற்ற ஓட்டும் சமமாக இருந்துள்ளது. இதைவிட அதிக ஓட்டுகள் இருப்பதை புள்ளி விவரத்துடன் நிரூபிக்க பாஜகவால் முடியவில்லை. அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும்போது ஓட்டு சதவீதத்துக்கு முதலிடம் அளிக்கப்பட்டதால், மதுரையில் பாஜகவின் அமைப்பு ரீதியான பணிகள் எடுபடவில்லை.
அதிமுகவுக்கு ஒதுக்கீடுமதுரை பாஜகவில் குறிப்பிடத்தக்க தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் மதுரையை கண்டிப்பாக பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் வலியுறுத்த முடியாமல் போயுள்ளது.
பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுக, தேமுதிக, தமாகா மதுரை யில் தங்களுக்கு குறிப்பிட்ட அளவு ஓட்டு சதவீதம் இருப்பதை புள்ளி விவரத்துடன் நிரூபித்துள்ளன. அந்த வகையில் அதிக ஓட்டு சதவீதம் வைத்திருக்கும் அதிமுக, மதுரையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டது.
அதே நேரத்தில் கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளில் முந்தைய தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பாஜக வாங்கியுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த அடிப்படையில்தான் குறிப்பிட்ட 5 தொகுதிகளையும் பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது.
கட்சியினர் ஏமாற்றம்அதிமுக கூட்டணி முடிவாகும் முன்பே மதுரையில் முதல் கட்டப் பணிகளை முடித்து, நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை வரவழைத்து அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில் மதுரை கிடைக்காமல் போனது பாஜகவினருக்கு ஏமாற்றம் அளித் துள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் கூறியதாவது: மதுரை தொகுதி பாஜக வுக்கு கிடைக்காதது வருத்தம் தான். பாஜகவைப் பொருத்தவரை திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். அதற்காக 40 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவதாக நினைத்து தேர்தல் பணி செய்வோம். மதுரையில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு நூறு சதவீத ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT