Published : 19 Mar 2019 08:00 PM
Last Updated : 19 Mar 2019 08:00 PM
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகில் பரவலான ரசிகர்களால் வித்தியாசமான செயல்பாடுகளால் விரும்பப்படுபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். எனக்கு யாரும் போட்டியில்லை. நடிகர் ரஜினிகாந்த்தான் எனக்குப் போட்டி என்று பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பல வித்தியாசமான நிகழ்வுகளைக் காண்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலையில் கட்சிகள் உடைந்து அணியாக மாறியுள்ள நிலையில் பலரும் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதில் நடிகர் பவர் ஸ்டாரும் ஒருவர். தென் சென்னை தொகுதியில் அவர் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை 'இந்து தமிழ் திசை'க்காக பேட்டி கண்டபோது அவரிடம் தென் சென்னையில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்டது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்த அவர், ''திமுக, அதிமுக கடும்போட்டியை எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டதற்கு மக்கள் துணையோடு சந்திப்பேன்'' என்றார்.
பிரபலமான நீங்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணையாமல் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தது ஏன் என்கிற கேள்விக்கு, ''நான் ஏற்கெனவே இந்தக் கட்சியில் மாநில நிர்வாகியாக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
உங்கள் மீதுள்ள வழக்குகள் நீங்கள் போட்டியிடத் தடையாக இருக்காதா? என்று கேட்டபோது, ''எதுவும் பிரச்சினை இல்லை என்று என் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்'' என்றார். வாக்காளர்களுக்கு உங்களுடைய மெசேஜ் என்ன என்ற கேள்விக்கு, ''இரண்டொரு நாளில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
கமல் கட்சியுடன் உங்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ''அது செ.கு.தமிழரசனின் கட்சி. நாங்கள் அகில இந்திய குடியரசுக்கட்சி. ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான கட்சி'' என்று பவர்ஸ்டார்ட் சீனிவாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT