Last Updated : 23 Mar, 2019 09:49 AM

 

Published : 23 Mar 2019 09:49 AM
Last Updated : 23 Mar 2019 09:49 AM

ஸ்ரீபாத அம்ரித் டாங்கே: தொழிற்சங்க முன்னோடி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர், இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தளகர்த்தர் என்று பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் எஸ்.ஏ. டாங்கே. 1899 அக்டோபர் 10-ல், நாசிக் மாவட்டத்தின் கராஞ்ச்காவோன் என்ற கிராமத்தில் பிறந்தார். பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர கல்லூரிப் படிப்பைத் துறந்தார். 1917-ல் நடந்த ரஷியப் புரட்சியால் கவரப்பட்டு மார்க்சியத்தில் ஈடுபாடு காட்டினார். இந்திய சோஷலிஸ்ட் காங்கிரஸ் உறுப்பினரானார். 1940-ல் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் டாங்கேவின் புகழ் பரவியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டு மொத்தம் 13 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் அவர்.

1921-ல் காந்தி, லெனின் இருவருடைய அணுகுமுறைகளையும் ஒப்பிட்டு துண்டறிக்கை தயார் செய்தார். இதன் மூலம் மார்க்ஸிய அறிஞர் எம்.என். ராயின் அபிமானத்தைப் பெற்றார்.ராஞ்சோதாஸ் பவன் லாட்வாலா என்ற தொழிலதிபரும் அந்தத் துண்டறிக்கையால் ஈர்க்கப்பட்டார். இருவரும் சேர்ந்து மார்க்ஸிய தத்துவ நூல்களுக்கான நூலகத்தை உருவாக்கினர். டாங்கேவின் கட்டுரைகளை லெனினே படித்துப் பாராட்டியதாக மொஹித் சென் குறிப்பிட்டிருக்கிறார். டாங்கே சிறந்த எழுத்தாளர். ‘சோஷலிஸ்ட்’ என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார். 1957 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் பணியாற்றியவர்.

1962-ல் நடந்த சீனப் படையெடுப்புக்குப் பிறகு கட்சியிலிருந்த சீன ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆதரவாளரான டாங்கேவுக்கும் மோதல் முற்றியது. கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. மார்க்ஸிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. 1978 வரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார் டாங்கே. 1981-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.  அனைத்திந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஏஐசிபி), ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (யுசிபிஐ) ஆகிய கட்சிகளிலும் சேர்ந்தார். இறுதிக் காலத்தில் அரசியல் அரங்கில் செல்வாக்கிழந்தார். மகாராஷ்டிரம் மொழிவாரி மாநிலமாக உருவானதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x