Published : 18 Mar 2019 11:28 AM
Last Updated : 18 Mar 2019 11:28 AM
விருதுநகர் தொகுதி அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் தலைகாட்டாததால் இங்கு மீண்டும் போட்டியிடுவதை அக்கட்சி தவிர்த்துள்ளது. விருதுநகர் தொகுதி விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதியில் 2,32,537 வாக்காளர்களும், சிவகாசியில் 2,40,676 வாக்காளர்களும், விருதுநகரில் 2,08,733 வாக்காளர்களும், அருப்புக்கோட்டையில் 2,11,338 வாக்காளர்களும், திருப்பரங்குன்றத்தில் 3,01,557 வாக்காளர்களும், திருமங்கலம் தொகுதியில் 2,64,475 வாக்காளர்களும் என மொத்தம் 14,59,316 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் வைகோவை பின்னுக்குத் தள்ளி 4,06,694 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். வைகோ 2,61,143 வாக்குகளும், திமுக வேட்பாளர் ரத்தினவேலு 2,41,505 வாக்குகளும், அப்போதைய சிட்டிங் எம்.பி.யும் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம்தாகூர் 38,482 வாக்குகளும் பெற்றனர்.
டி.ராதாகிருஷ்ணனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அப்போது, அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோரின் தீவிர பிரச்சாரம் கை கொடுத்தது. ஆனால் வெற்றிபெற்று எம்.பி. ஆன் பிறகு டி.ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகளில் , இதுவரை விருதுநகரிலோ அல்லது தனது வசிப்பிடத்தின் அருகே உள்ள சிவகாசியிலோ மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறந்து பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்டதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட அவர் வரவில்லை என்றும், அரசு விழா மற்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே டி.ராதாகிருஷ்ணன் எம்.பி.யைப் பார்க்க முடியும் என்றும் மற்ற நாட்களில் தொகுதி மக்களின் கண்களில் அவர் தென்படுவதே இல்லை என்றும் பிற கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
டி.ராதாகிருஷ்ணன் எம்.பி. இம்முறை போட்டியிட மறுத்து விட்டார் என்பதோடு, மீண்டும் வாக்கு கேட்கச் சென்றால் வாக் காளர்கள் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது என்பதற்காகவே அதிமுகவின் கோட்டையாக விளங்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதி கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT