Published : 05 Mar 2019 01:02 PM
Last Updated : 05 Mar 2019 01:02 PM
உள்ளூர் பிரச்சினைகளைப் பொறுத்து வரும் மக்களவைத் தேர்தலில் மண்டலம் வாரியாக ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளதாகவும் அதனால் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்பதை இப்போதைக்கு தீர்மானிக்க முடியாத சூழலே நிலவுகிறது என்றும் உளவுத்துறை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் தொடரும் அதிமுக அரசை மத்திய பாஜக வழி நடத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தமிழக நலன் கருதியே பாஜகவுடன் நெருக்கமாகச் செயல்படுகிறோம் என, அதிமுகவினர் பதில் அளிக்கின்றனர்.
டெல்டா பகுதியில் கொண்டுவந்த ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்திற்கு எதிர்ப்பு, கஜா புயல் பாதிப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், கொங்கு மண்டலத்தில் 8 வழிச்சாலை, விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதி போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் மாவட்டம் வாரியாக இளைஞர்கள், அமைப்பு ரீதியானவர்கள், விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் உள்ளன.
இது போன்ற சில பிரச்சினைகள் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அமையும். இது 2019 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கலாம். அப்போது, கட்சி ஓட்டுகள் தவிர, பிற ஓட்டுகள் சிதற அதிக வாய்ப்புள்ளது என்கிறது உளவுத்துறை.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை போலீஸ் அதிகாரி ஒருவர், "மக்களவைத் தேர்தல் மூலம் மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதைவிட, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதே பிரதானம். ஏற்கெனவே களம் கண்ட பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, கம்யூனிஸ்டுகள், விடு தலை சிறுத்தைகள், புதிய தமிழகம். தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன், புதிதாக அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புது கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடுகின்றன.
கமலஹாசன் அவரது ரசிகர்கள் ஓட்டுகளுடன் கனிசமாக இளைஞர்கள் ஓட்டுகளைப் பிரிக்கலாம். அதிமுக- அமமுக குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்கள் யார் பக்கம் என, முழுமையாக தீர்மானிக்க முடியாத சூழலில் இத்தேர்தல் அதற்கு விடை அளிக்கும். மண்டலம் வாரியாக எழுந்துள்ள பிரச்சினைகளைப் பொறுத்து இளைஞர்களின், விவசாயிகள், அமைப்புகள் ஓட்டுகள் சிதறும்.
வட மாவட்டங்களில் பாமகவுக்கும், டெல்டா பகுதியில் கஜா புயலால் ஆளும் கட்சிக்கு எதிராவும், தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு அதரவாகவும், கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சிக்கும் ஆதரவு இருக்கும் என்றாலும், சமூக வலைதளங்கள் தாக்கம் அதிகரிப்பால் தமிழகத்திலுள்ள 2.50 கோடி இளைஞர்கள் ஓட்டு யார் பக்கம் என, தீர்மானிக்க முடியாது. இவர்களே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அமையலாம். தேர்தல் தேதி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வைப் பொறுத்து ஒவ்வொரு கட்சிக்கும் செல்வாக்கு, நிலைப்பாடு மாறும்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT