Published : 29 Mar 2019 09:38 AM
Last Updated : 29 Mar 2019 09:38 AM
இன்றைக்கு ரயில் பயணிகளுக்குக் கிடைத்துவரும் வசதிகளில் பெரும்பாலானவற்றைக் கொண்டுவந்தவர் ஜனதா ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்த மது தண்டவதே. சுதந்திரப் போராட்ட வீரர். வி.பி.சிங் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகவும், பின்னர் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் அவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் காலங்களில் பரபரப்பாக இயங்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். எளிமையானவர். அர்ப்பணிப்பு மிக்கவர்.
மகாராஷ்டிரத்தின் அகமத்நகரில் 1924 ஜனவரி 21-ல் பிறந்தார். மும்பை ராயல் அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்ததன் மூலம், அவரது பொது வாழ்வு தொடங்கியது. கோவா விடுதலைப் போரிலும் சம்யுக்த மகாராஷ்டிரக் கிளர்ச்சியிலும் பங்கேற்றார். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். பின்னர், ஜனதாவில் இணைந்தார். ராஜாப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 முதல் 1991 வரையில் ஐந்து முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருக்கடிநிலை அமலின்போது கைதுசெய்யப்பட்டார்.
ரயில்வே அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ரயில்களின் பர்த்களில் முதுகை உறுத்தும் மரக்கட்டைப் படுக்கை மீது இரண்டு அங்குல கனத்துக்கு நுரை ரப்பர் மெத்தையைப் பொருத்தும் பணியைத் தொடங்கியவர்.
60-க்கும் மேற்பட்ட பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தினார். பயணிகளின் அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்தார். அவருடைய மனைவி பிரமீளா 1980-களில் மும்பையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அரசியல் சார்பற்ற எல்ஐசி நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவராகத் தனது வாழ்நாளின் கடைசி 24 ஆண்டுகள் பதவி வகித்தார் மது தண்டவதே. இறப்புக்குப் பிறகு தனது உடல், மும்பை ஜே.ஜே. மருத்துவமனை மாணவர்களின் பரிசோதனைக்கு வழங்கப்பட வேண்டும் என்று எழுதிவைத்து உடல் தானம் செய்தவர். “இறப்பிலும்கூட நாட்டுக்குப் பயன்படும் நல்ல செயலைச் செய்திருக்கும் தண்டவதே நமக்கு விட்டுச்செல்லும் செய்தி - அனைவரும் நண்பர்களே, ஒருவரும் எதிரி இல்லை என்பதுதான்” என்று வி.பி.சிங் வெளியிட்ட இரங்கல் செய்தியே அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT