Published : 21 Mar 2019 04:35 PM
Last Updated : 21 Mar 2019 04:35 PM
மதுரையில் ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலும், சித்திரைத் திருவிழாவும் நடப்பதால் அசம்பாவிதங்கள் நேராமல் தடுக்க நகரில் கூடுதல் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த மாநகர் காவல்துறை ஏற்பாடு செய்து வருகிறது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.19-ம் தேதி நடக்கிறது. முன்னதாக, அழகர் மலையில் இருந்து மதுரை நகர் எல்லையை கள்ளழகர் அடையும் வரை பாதுகாப்பு பணியில் புறநகர் பகுதியில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுவர்.
ஆனால், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையில் இறங்குவது முதல் வண்டியூர் வரை மண்டகப் படிகளில் எழுந்தருளல் தொடர்ந்து அழகர் மலைக்கு கள்ளழகர் திரும்பும் வரை திருவிழா பாதுகாப்புக்கு நகரில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். இந்நிலையில், ஏப்.18-ம் தேதி மதுரையில் தேரோட்டம் நடக்கிறது. இரவில் எதிர்சேவை, அடுத்த நாள் அதிகாலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்கின்றன. அதேநேரம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது.
இதனால் நகரில் முதல்நாளே வாக்குச் சாவடி களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருவிழா பாதுகாப்பிலும் ஈடுபட வேண்டும். இதனால் போலீஸார் ஓய்வின்றி பணி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நகரில் பணியாற்றும் அனைத்து போலீஸாரும் திருவிழாவுக்கு முன்பும், பிறகும் 5 நாட்களுக்கு விடுப்பு எடுக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் விடுப்பு எடுக்கலாம். தேர்தல், திருவிழா பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என போலீஸாருக்கு காவல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நகரில் திருவிழா நடக்கும் முக்கிய வீதிகள், வாக்குச் சாவடிகள் அதிகமுள்ள பகுதி, பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையின் கேமராக்கள் உள்ளன. சில தெருக்களில் குடியிருப்போர் நலச் சங்கத்தினரும், வர்த்தக நிறுவனங்களும் சிசிடிவி பொருத்தி உள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகரில் பல இடங்களில் தெருக்கள், வர்த்தக நிறுவனங்களில் பரவலாக சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், ஒரே நேரத்தில் இரு முக்கிய நிகழ்வும் (தேர்தல், திருவிழா) நடப்பதால் கூடுதல் போலீஸார் தேவைப்படுவர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாசி வீதிகள், வாக்குச் சாவடிகள் அதிகமாக இருக்கும் பகுதி, சுவாமி வீதியுலா செல்லும் வழித்தடங்களில் ‘ ஸ்பான்சர்கள்’ மூலம் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 தெருக்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து கேமரா பதிவுகள் கண்காணிக்கப்படும். நகர் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT