Published : 25 Mar 2019 08:14 AM
Last Updated : 25 Mar 2019 08:14 AM
இந்திய அரசியல் வரலாற்றில் குஜராத்தைச் சேர்ந்த இன்னொரு மோடிக்கும் இடம் உண்டு. அவர் பிலு மோடி. 1967 மக்களவைத் தேர்தலில் கோத்ரா தொகுதியிலிருந்து சுதந்திரா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதே தொகுதியில் மீண்டும் 1971 தேர்தலிலும் வென்றார். 1978 முதல் இறப்பு வரை (1983) மாநிலங்களவை உறுப்பினர். சுதந்திரச் சிந்தனையாளர். தாராளவாத ஆதரவாளர். பெர்க்லியில் உடன் படித்த மேலைநாட்டு மாணவியைக் காதலித்து மணந்தவர்.
ராஜாஜியின் மதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமானவர். சுதந்திரா கட்சியின் உருவாக்கம், வளர்ச்சியில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஜுல்பிகர் அலி புட்டோ குறித்து ஒரு புத்தகத்தையும், ஜனநாயகம் என்பது உணவும் சுதந்திர உணர்வையும் பற்றியது என்றும் இரு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நெருக்கடிநிலையின்போது டெல்லியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கைதுசெய்தனர். அவரது நண்பர் மது மேத்தா உடனே ஒரு நிருபருக்குத் தொலைபேசியில் இதைத் தெரிவித்தார். மோடியின் கைது மட்டுமே அப்போது பத்திரிகை அலுவலகங்களைச் செய்தியாக எட்டியது.
நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர். தனது பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘பிஎம்’ என்று எழுதுவார். இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதும்போது ‘டியர் பிஎம்’ என்று ஆரம்பித்து ‘யுவர் பிஎம்’ என்று கிண்டலாக முடிப்பார். நாடாளுமன்ற விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் ஜெயில்சிங், “எனக்குக் கொஞ்சம்தான் ஆங்கிலம் தெரியும்; பிலு மோடிக்கு அவருடைய மனைவி ஆங்கிலம் சொல்லித்தருவதால் என்னைவிட அதிகமாகத் தெரியும்” என்றார். அவையே கொல்லென்றுச் சிரித்தது. உடனே பிலு மோடி எழுந்து, “என்னுடைய மனைவி மேலைநாட்டுக்காரர்தான், ஆனால் சுவீடன் தேசத்தவர், அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத்தரவில்லை, நான்தான் கற்றுத்தந்தேன்” என்றார். சிரிப்பலை ஓய பல நிமிடங்கள் பிடித்தது. எதிர்க்கட்சிக்காரர்களை காங்கிரஸார் அப்போது ‘சிஐஏ கையாள்’ என்று சாடுவது வழக்கம். ஒருமுறை நாடாளுமன்றத்துக்கு எதிரே எதிர்க்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தியபோது ‘நான் ஒரு சிஐஏ கையாள்’ என்று எழுதிய அட்டையைக் கழுத்தில் அணிந்துகொண்டார். பிறகு, அத்துடன் நாடாளுமன்றத்துக்கும் வந்தார். இந்திரா காந்தி கேட்டுக்கொண்ட பிறகே அதை அகற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT