Published : 29 Mar 2019 05:54 PM
Last Updated : 29 Mar 2019 05:54 PM

பாஜகவை விட நாங்கள் ஸ்ட்ராங்; உதயநிதியின் பிரச்சாரம் எப்படி?- அதிமுக ஐடி பிரிவு செயலர் சிறப்புப் பேட்டி

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐஐஎம் பட்டதாரியான ராமச்சந்திரன், கேம்பஸ் தேர்வில் கூட கலந்துகொள்ளாமல் நேராக வந்து அதிமுகவில் இணைந்தவர். அதற்குப் பரிசாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிவாகை சூடியதற்கு அதன் தொழில்நுட்ப அணியும் ஒரு காரணம். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்த ராமச்சந்திரனிடம் 'இந்து தமிழ் திசை' இணையம் சார்பில் பேசினோம்.

மக்களவைத் தேர்தல் களைகட்டிவிட்டது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. என்ன பிரச்சார வியூகத்தை அமைத்திருக்கிறீர்கள்?

கடைசி நிமிடத்தில் எதையும் திட்டமிடாமல், கடந்த 6 மாதங்களாகத் திட்டமிட்டு தேர்தலுக்காக உழைத்து வருகிறோம். நல்ல பலன் கிடைத்திருக்கிறது. சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் முதல் முறை வாக்காளர்கள். 'பப்ஜி', 'கேண்டி கிரஷ்' உலகம்தான் அவர்களுக்கு முதன்மையானது. திராவிடம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது. அதனால் அவர்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் 2.5 கோடிப் பேர் இருக்கின்றனர். அவர்களுக்காக பிரத்யேகப் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

அதேபோல இளைஞர்கள், தொழில் முனைவோர், பேராசிரியர்கள், மாணவர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அவரவருக்குத் தகுந்த வகையில், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்கிறோம். அதிமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, வருங்காலத்தில் என்ன செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறோம்

சாமானியர்களும் பயன்படுத்தும் செயலி வாட்ஸ் அப். அதை எந்த வகையில் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்?

இதற்காகத் தனிக் கட்டமைப்பையே உருவாக்கி இருக்கிறோம். கிராமப் புறங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்பாட்டை விட வாட்ஸ் அப் பயன்பாடு அதிகமாக இருப்பதை உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிமுக சார்பில் நிறைய வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

செய்திகள் அதிமுக தலைமையில் இருந்து நேரடியாக 1000-க்கும் மேற்பட்ட குழுக்களுக்குச் செல்லும். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 100 முதல் 150 பேர் இருப்பார்கள். இதனால் வெறும் 10 நிமிடங்களில் 1 முதல் 1.5 லட்சம் பேருக்கு எங்களின் தகவல் சென்றடையும். அவர்கள் அந்தத் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவார்கள். 1 லட்சம் பேர் குறைந்தபட்சம் 1 குழுவுக்கு அனுப்பினால்கூட 50 லட்சம் பேருக்குத் தகவல் சென்று சேர்ந்துவிடும்.

செய்திகளைப் பகிர்வதில் என்ன தனித்துவத்தைக் கையாள்கிறீர்கள்?

தகவல்களை 'இன்ஃபோகிராபிக்ஸ்' வடிவில் பகிர்கிறோம். உதாரணத்துக்கு தேர்தல் அறிக்கையை பாயிண்ட் பாயிண்ட்டாக இன்ஃபோகிராபிக்ஸ் போட்டு, வண்ணமயமாக அனுப்பினோம். சுமார் 50 படங்கள் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் அறிக்கை இல்லாத செல்போனே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

அதேபோல கூகுளில் DMK AT என்று டைப் செய்தால், திமுக எங்கெல்லாம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்ற தகவல்கள் வரும். அதை எடுத்துக்கொண்டு ''கூகுளுக்கே தெரிகிறது; உங்களுக்குத் தெரியாதா?'' என்று பிரச்சாரம் செய்தோம். அதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல Internal App ஒன்று இருக்கிறது. அதை தகவல் தொழில்நுட்ப அணியினர் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு செய்தியைப் பதிவிட்டால், உடனடியாக ஐடி விங் நபர்களின் தனிப்பட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அவை ஆட்டோமேட்டிக்காக பகிரப்படும். தமிழகத்தை 50 மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறோம். ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 1000 பேர் அந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். 50 மாவட்டங்கள் சேர்த்து 50,000 பேர் அதைத் தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்வர். அதைக் குறைந்தது 100 பேருக்காவது சென்றடையும்போது சுமார் 50 லட்சம் பேருக்குத் தகவல் சென்றுசேரும்.

இப்போது, குறிப்பாக ஓபிஎஸ் தனது மகனைக் களமிறக்கிய பிறகு, அதிமுக மீதும் வாரிசு அரசியல் விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்படுகிறதே?

எதிர்க்கட்சிகள்தான் அப்படிக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே அந்த எண்ணம் இல்ல்லை. திமுகவில் வேட்பாளர் பட்டியலில் 35 சதவீதம் வாரிசுகளுக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. மூவருக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு (ஜெயவர்தன்) அம்மாவே எம்.பி. வாய்ப்பு கொடுத்தார். மற்ற இருவரும் (ரவீந்திரநாத், ராஜன் சத்யன்) கட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள்.

தேர்தலில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் திமுக இவ்வாறு விமர்சனம் செய்கிறது.

இந்தத் தேர்தலில் திமுக தலைவர்களுக்கு நிகராக உதயநிதி ஸ்டாலினும் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். அண்மையில் எடப்பாடி பழனிசாமியிடம் கூட யாருக்கு செல்வாக்கு என்று நிரூபிக்கலாமா என்று சவால் விடுத்தார். அவரின் பிரச்சாரம் எப்படி இருக்கிறது, சினிமா பிம்பத்தால் கூடும் கூட்டத்தை உதயநிதி வாக்குகளாக மாற்றுவாரா?

உதயநிதியின் பிரச்சாரம் நேர்மறையாக அல்ல எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். சம்பந்தமில்லாமல் அவர் கட்சிக்குள் நுழைந்தது திமுக தலைவர்களுக்கே பிடிக்கவில்லை. திமுகவில் 10-ல் 8 பேர் உதயநிதியின் வருகையை விரும்பவில்லை.

ஏன் ஸ்டாலினே ஒருமுறை, ''என் மகனோ, மகளோ அரசியலுக்கு வரமாட்டார்கள்'' என்று கூறினார். கனிமொழியும் சொல்லியிருந்தார். ஆனால் நிஜத்தில் நடப்பது வேறாக இருக்கிறது. உதயநிதியை தலைவர் போலவே உருவகப்படுத்துகின்றனர். அறிவாலயத்தில் உதயநிதியின் படம் வைக்கப்படுகிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஸ்டாலின் தலைமைக்கு சமூக வலைதளங்களில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது?

அவரிடத்தில் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. அவர் தலைமைப் பதவிக்கு வந்து எதையும் இன்னும் செய்யவில்லை. முதலில் அவர் தலைவர் என்று கட்சியில் நிரூபித்துவிட்டு மக்களிடம் நிறுவட்டும். அவரின் பேச்சும் செயல்களும் ஒத்துப்போகவில்லை.

கிராமசபைகளில் அவர் தப்பும் தவறுமாகப் பேசியது இணைய வெளியில் ஸ்டாலின் மீது நெகட்டிவ் பிம்பத்தையே ஏற்படுத்தியது. ''தலைவர் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பார், இப்படி செய்திருப்பார்'' என்று கட்சிக்குள்ளேயே முணுமுணுக்கிறார்கள்.

2014 தேர்தலில் மோடி அலை வீசியதில் முக்கியப் பங்கு வகித்த காரணி பாஜகவின் ஐடி பிரிவு. கடந்த 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சியாக அவர்களிடம் இருந்து தொழில்நுட்பத்தில் ஏதேனும் கற்றுக்கொண்டீர்களா?

பாஜக தேசிய அளவில் வலிமையாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் (அதிமுக) ஸ்ட்ராங். 'அம்மா'வின் வழிகாட்டுதலால் 2014-ல் நாங்கள்தான் முதன்முதலில் ஐடி பிரிவைத் தொடங்கினோம். எனினும் கூட்டணி என்ற வகையில், இரண்டு தரப்பினரும் சாதனைகளைப் பாராட்டிக் கொள்வோம்.

ஜெயலலிதாவின் ஆடியோ, வீடியோக்களைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் திட்டம் இருக்கிறதா?

கண்டிப்பாக, 'அம்மா' மட்டுமல்ல தலைவரின் ஆடியோ, வீடியோக்களையும் பயன்படுத்த உள்ளோம். அவர்கள் இருவரும் வெறும் தலைவர்கள் அல்ல. தாங்கள் யார் என்று மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நிரூபித்தவர்கள். தேர்தல் வேளை நெருங்கும்போது அவர்களின் உரைகள் பயன்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா?

18 முதல் 21 வயது இளைஞர்களுக்கு அதிக விழிப்புணர்வு இல்லை. அவர்கள் அந்த வயதுக்கே உரிய கொண்டாட்டங்களுடன் கல்லூரி வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். எனினும் முந்தைய காலங்களைவிட இப்போது அந்த நிலை மெல்ல மாற ஆரம்பித்துவிட்டது. சோஷியல் மீடியாக்கள் அவர்களின் கைகளில் மீம்ஸ் வடிவிலேயே அரசியல் சூழலைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு இயல்பாகவே அரசியலில் ஈடுபாடு ஏற்படுகிறது. தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் அதை அதிகரிப்பது ஆரோக்கியமான சூழல்.

அதிமுக தொழில்நுட்ப அணியில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்?

ஆரம்பத்தில் சொன்னதுபோல, தமிழகம் 50 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 14 பேர் என 700 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அதிகாரபூர்வமாக தொழில்நுட்ப அணியில் பதவியில் இருப்பவர்கள். பதவியில் இல்லாதவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 பேர் இருப்பர். இதுதவிர மாணவரணி, இளைஞரணி வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது தனி.

சமூகவலைதள மேம்பாடு தொடர்பாக முதல்வர், துணை முதல்வரைச் சந்தித்துப் பேசுவீர்களா?

ஒவ்வொரு திட்டத்தையும் அவர்களின் அனுமதி பெற்றுத்தான் செயல்படுத்துகிறோம். இருவருமே தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்கள்தான்.

அதிமுக வெறுப்பாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை உங்கள் அணி எப்படிக் கையாளுகிறது?

மிகவும் எளிதான காரியம்தான். இதற்காக உடனடி எதிர்வினைக் குழு (Rapid Response Team) அமைக்கப்பட்டுள்ளது. எதிர் தரப்பில் சொல்லப்பட்ட கருத்து போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதா, தகவல்களும் புள்ளிவிவரங்களும் தவறாகப் பகிரப்பட்டுள்ளதா என்று அவர்கள் பார்ப்பார்கள். அவை தவறு எனில் பகிர்ந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். நாகரிகமாகப் பேசினால் நாங்களும் அவர்களை நாகரிகமாக எதிர்கொள்வோம்.

அதிமுக நிர்வாகிகள் சிலரே அருவருக்கத்தக்க வகையில் அரசியல் விமர்சனம் செய்கின்றனரே... இது சரியா?

கண்டிப்பாக இருக்காது. அப்படி இருந்தாலும் அவர்களை நீக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'அம்மா'வின் கண்ணியமான கட்சியில் இதுபோன்று நடப்பதை ஊக்கப்படுத்தமாட்டோம். அநாகரிகமாகப் பேசுபவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி அதிமுகவுக்கு இருக்காது என்று கூறப்படுகிறதே..

அப்படியான தகவல் எங்கும் இல்லையே. அதிமுக சிறுபான்மை இனத்தவரின் ஆதரவுக் கட்சி. 'அம்மா' சென்ற அதேவழியில் இப்போதும் இயங்குகிறது. சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். திமுக, முஸ்லிம்களின் ஓட்டைப் பெறவேண்டும் என்பதற்காக அப்படிக் கூறுகிறது.

தினகரனின் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அவர் அதிமுகவின் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்துவிடுவாரா?

நிறைய பேசுகிறார். ஆனால் அவர் இதுவரை  எதையும் நிரூபிக்கவில்லை. எதுவுமே இல்லை என்ற நிலைக்கு அருகில்தான் இருக்கிறார். ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிகூட 20 ரூபாய் டோக்கனால் கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இரட்டை இலை எங்களிடம் இருக்கிறது, கட்சிப் பெயர் இங்குள்ளது. தொண்டர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். அதனால் அதிமுக இமாலய வெற்றி பெறும்'' என்றார் ராமச்சந்திரன்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x