Published : 26 Mar 2019 07:42 AM
Last Updated : 26 Mar 2019 07:42 AM
வருவாரா... மாட்டாரா? காஷ்மீரின் எதிர்பார்ப்பு
காஷ்மீர் மாநிலத்திலிருந்து 2010-ல் ஐஏஎஸ் தேர்வு எழுதி முதலிடம் பிடித்துக் கவனம் ஈர்த்தவர் ஷா ஃபசல். எட்டு ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அவர் திடீரென வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை இந்த ஆண்டு உருவாக்கினார். அப்பாவி காஷ்மீர்வாசிகள் ராணுவத்தாலும் காவல் துறையாலும் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்கவும், இந்திய முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தும் இந்த இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். அறிவுஜீவியும் அரசு நிர்வாகத்தில் தேர்ச்சிபெற்றவருமான இவரது அரசியல் வருகையை அரசியல் தலைவர்கள் சற்றே கலக்கத்துடன்தான் பார்த்தனர். ஆனால், ஃபசலோ தனது முடிவுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். இப்போது மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்து காஷ்மீர்வாசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் உருது இளங்கவிஞர்
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் திரைப்பட நடிகருமான ராஜ் பப்பர், மொராதாபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு, பதேபூர் சிக்ரி தொகுதிக்கு ராஜ் பப்பரை மாற்றிவிட்டு, உருதுக் கவிஞர் முகமது இம்ரானைக் களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ். 32 வயதான முகமது இம்ரான், முஷைரா என்றழைக்கப்படும் கவியரங்கங்களில் தொடர்ந்து பங்கெடுப்பவர். மும்பையில் 2010-ல் நடந்த கவியரங்கத்தில் பிரபலமான அவர் நூற்றுக்கும் மேற்பட்ட இசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். பாலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறை, புதுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது காணாமல்போனது, வகுப்புக் கலவரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் மிகப் பெரிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT