Published : 24 Mar 2019 04:36 PM
Last Updated : 24 Mar 2019 04:36 PM
கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். 50 வருடங்கள் கழித்து கண்டுபிடித்து சொல்கிறார் என்றால் அவர் 50 வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்தாரா என்று நடிகர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திமுக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உதயநிதி பதில் அளித்தார்.
தேர்தல் களத்தில் மக்கள் மனநிலை என்னவாக உள்ளது?
கல்விக்கடன் ரத்து, நீர் தேர்வு ரத்து, விவசாயக் கடன் ரத்து என திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது. இதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி மீதும் தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். குறிப்பாக மோடி மீது மக்கள் அதிக கோபத்தில் உள்ளனர். மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது.
பொதுவாக தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லையே?
தலைவர் கலைஞர் சொல்வதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்று கூறுவார். இலவச தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குவதாக தலைவர் கலைஞர் அறிவித்தார். அதன்பேரில் கொடுக்கப்பட்டது. திமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 99% நிறைவேற்றியுள்ளது.
50 ஆண்டுகாலமாக திமுகவும், அதிமுகவும் எதுவும் செய்யவில்லை என்று கமல் கூறியுள்ளாரே?
கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். 50 வருடங்கள் கழித்து கண்டுபிடித்து சொல்கிறார் என்றால் அவர் 50 வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்தாரா?
நீட் தேர்வு ரத்து என்பதை அதிமுகவும் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லி இருக்கிறதா?
நீட் தேர்வை ரத்து செய்வதாக அதிமுக கூறுவது மக்களை ஏமாற்றும் வித்தை. அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே நீட் தேர்வை ரத்து செய்திருக்க முடியும். சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட நீட் தேர்வு ரத்துக்கான தீர்மானம் எங்கே போனது என தெரியவில்லை. ராகுல் காந்தி நீட் தேர்வு ரத்துக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT