Published : 28 Mar 2019 08:56 AM
Last Updated : 28 Mar 2019 08:56 AM
இந்த முறை நாட்டின் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையில், பெண்களே அதிகம் என்கிறது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரம். முதல் முறை வாக்காளர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3.80 கோடிதான். புதிதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4.35 கோடி. தமிழகத்திலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம். பெண் வாக்காளர்களின் வாக்குகளே இந்த முறை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றும் பேசப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் என்று முன்னேறிய பல நாடுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வெகு தாமதமாகத்தான் வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 1951-1952-ல் நடந்த பொதுத் தேர்தலிலேயே வாக்களிக்கும் உரிமை பெண்களுக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக்கோரி குரல்கள் எழுந்தன. 1917-ல் தொடங்கப்பட்ட ‘விமன்ஸ் இந்தியன் அசோசியேஷன்’ இக்கோரிக்கையை முன்னெடுத்தது. 1919-ல் கொண்டுவரப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அம்சமும் இடம்பெற்றது.
1920-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1921-ல் சென்னை, பம்பாய் மாகாணங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சொத்து இருப்பவர்கள், வரி கட்டுபவர்கள், கல்வியறிவு கொண்டவர்களுக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது. பெண்களுக்கும் இதே விதிகள்தான். அந்த வகையில், ஒரு பெண்ணின் வாக்குரிமை, தந்தை / கணவரின் சொத்து, சமூக அந்தஸ்து ஆகியவற்றைச் சார்ந்ததாகவே இருந்தது. இப்படிப் பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் பெண்கள் வாக்குரிமையைப் பெற முடிந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடி. இதில் 8 கோடிப் பேர் பெண்கள்!
- ஐசக்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT