Published : 29 Mar 2019 08:44 PM
Last Updated : 29 Mar 2019 08:44 PM
தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின் பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதில் கடும் கெடுபிடிகள் அதிகரிக்கும். இதில் சாதாரணப் பொதுமக்களும், வியாபாரிகளும்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக பொதுவான கருத்து உள்ளது.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதில் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்காக கடுமையான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்துகிறது.
ஆனால், தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட நடைமுறைகளைத் தற்போது அதே மாதிரி பின்பற்றுவதால் பொதுமக்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த பழைய பாணியால் பணப்பட்டுவாடாவை முழுமையாகத் தடுக்க முடியாது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பறக்கும் படையின் இலக்கு யார்?
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவைத் தடுப்பது, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதைத் தடுப்பது, வேட்பாளர் அதிக செலவு செய்வதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படுகின்றன. இதற்கு அந்தந்தப் பகுதிகளின் காவல்துறை, நகராட்சி, நிர்வாகத்துறை ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
அந்தவகையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்புக்குரியதுதான். ஆனால், நவீன உலகில் ஆன்லைன் பணப்பரிமாற்றம், ஏடிஎம்மில் பணம் செலுத்துவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் என தொழில்நுட்ப வசதிகள் அதிக அளவில் வந்துவிட்டன. இந்த சூழலில் பணப் பட்டுவாடாவைத் தடுப்பது என்பது சாலையில் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்து பணம், பொருட்களைப் பறிமுதல் செய்வது என்கிற ஒரே பாணியை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கிறது.
ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படுகிறதா? அப்படிக் கண்காணிக்கப்பட்டால் எவ்வளவு தொகை பிடிபட்டது, முடக்கப்பட்டது என்கிற தகவலும் வெளிவரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இவ்வளவு தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை இவ்வாறு பிடித்தோம். இந்த வேட்பாளர் பிடிபட்டார். இந்த அரசியல் கட்சியினரிடம் இவ்வளவு பணம் எடுத்தார்கள் என எதையாவது கூற முடியுமா? என்று ஒரு வியாபார சங்கப் பிரமுகர் கேள்வி எழுப்புவதை யாரும் முற்றிலுமாகப் புறம் தள்ளிவிட முடியாது.
பறக்கும் படையினர் நேற்று வரை தமிழகத்தில் ரூ.50.7 கோடி பணம், 69 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 90 சதவீதம் வியாபாரிகள், ஏடிஎம் பணம், பொதுமக்கள் பணம், டாஸ்மாக் வசூல் பணம், வங்கிப் பணம் என அனைத்தும் அடக்கம். உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் பணம் பிடிபட்டதாகத் தகவல் வருகிறது.
ஆனால், மகன் கண் அறுவை சிகிச்சைக்காக எங்கெல்லாமோ அலைந்து திரிந்து பணத்தைக் கொண்டு சென்ற தந்தையை மடக்கியது பறக்கும் படை. அவர் என்ன ஆவணம் வைத்திருப்பார்? அலையோ அலை என்று அலைகிறார். ஆனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை என்பதும் நம்முன் உள்ள யதார்த்தம்.
50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக எடுத்துச் செல்லவேண்டும் என்பது இந்தக் காலத்துக்கும் பொருந்துமா? போன்ற கேள்வி வியாபாரிகள் தரப்பில் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்க நிர்வாகி சிவ இளங்கோவிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
“தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுகிறது என காட்டிக்கொள்ளத்தான் இதுபோன்ற சோதனைகள் பயன்படுகின்றன. உண்மையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைப் பிடித்தது போன்ற சந்தர்ப்பம் வெகு குறைவுதான்.
எல்லாமே வியாபாரத்துக்காக கொண்டு செல்லப்படும் பணம், நகை வியாபாரிகள், வங்கிப் பணம், டாஸ்மாக் பணம், ஏடிஎம் பணம் போன்றவற்றைப் பிடித்துதான் இவர்கள் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்துக் கட்சிகளுமே இன்று வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கின்றன. அது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். அங்கு போய் கண்காணித்து இவர்கள் பிடிப்பதில்லை. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியைத் தழுவிவிட்டோம் என்று ஒப்புக்கொண்டதால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க, அந்தந்த தொகுதிகளுக்கு பணம் போய் ஏற்கெனவே சேர்ந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் அதைக் கண்காணித்து பிடிக்கும் ஏற்பாடு இங்கே இல்லை.
சின்னங்கள் ஒதுக்கீடு இன்றைக்கு முடிந்து விட்டது. இன்றிலிருந்து 15 நாட்கள் யார் யாருக்குப் பணம் கொண்டு சேர்ப்பது, பணப்பட்டுவாடா செய்வது எப்படி என்கிற வேலைகள்தான் நடக்கும். அது எல்லோருக்குமே தெரியும். ஆனால் பிடிப்பதில்லை. அதேபோன்று அனைத்துக் கட்சிகளும் கூட்டத்துக்குப் பணம், பிரியாணி, மதுபானங்கள் கொடுத்துதான் ஆள் சேர்க்கின்றன.
அவர்களுக்கு டோக்கன் கொடுத்து பின்னர் பணம் கொடுப்பது வெளிப்படையாக நடக்கிறது. ஆனால் அங்கெல்லாம் சென்று பிடிப்பதில்லை. பிடித்ததாக வழக்குகளும் அதிகம் இல்லை. எல்லாமே கண்ணுக்கு நேராகத் தெரிகின்றன. அதைத் தடுக்க வழியில்லை. அதேபோன்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு மாதிரியாக நூதன முறையில் நடந்துகொள்வதைத்தான் பார்க்க முடிகிறது.
இன்று தங்க நகைகள் அதிகம் சிக்குவது தங்க நகை வியாபாரிகளிடம்தான். அவர்களிடம் பேசினால் தங்க நகை செய்வது என்பது பழைய நகை. அது உருக்கப்பட்டு கட்டியாக்கப்படுவது, பின் புதிய நகை செய்ய கொண்டு செல்வது என 10 பேர் வரை கைமாறும் என்கிறார்கள். இதில் ஒவ்வொரு இடத்திலும் எங்கே பில் வைத்துக்கொள்வது என்ற அவர்களின் கேள்வியில் நியாயமும் உள்ளது.
பறக்கும் படை சோதனை என்கிற பெயரில் சாதாரண மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றோரிடம் நடக்கும் கெடுபிடியால் வியாபாரங்கள் எல்லாம் சுத்தமாக நொடிந்து போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.
பழைய நடைமுறைகளை வைத்துக்கொண்டு இன்னமும் பொதுமக்களைத்தான் தேர்தல் அதிகாரிகள் அச்சுறுத்துகிறார்களே தவிர அரசியல் கட்சிகள் ஜோராக அவர்கள் செய்வதை செய்துகொண்டுத்தான் இருக்கிறார்கள்.
தேர்தல் நடைமுறைகளில் மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும். கட்சி சின்னங்கள் ஒழிந்து எண்கள் முறை வரவேண்டும். தேர்தல் செலவுகளை ஆணையமே ஏற்று பிரச்சாரம் என்கிற விஷயத்துக்கு மாற்று கொண்டு வரவேண்டும்.
நவீன விஞ்ஞான யுக்திகள் வந்து அதன்மூலம் நவீன முறையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவனிக்கும்போது, இவையெல்லாம் தேர்தல் ஆணையம் நவீனமாக மாறவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது” என்றார் சிவ இளங்கோ.
மேலும் இதுகுறித்து பால் முகவர் சங்க மாநில நிர்வாகி சு.அ.பொன்னுசாமியிடம் பேசினோம்.
“பொதுமக்கள், வியாபாரிகளிடம் மட்டுமே பறக்கும் படை கடுமையாகச் செயல்படுகிறது. உதாரணத்திற்கு பால் முகவர்களாகிய நாங்கள் தினம் வரும் பால் பாக்கெட்டுகளை கடை கடையாகப் போட்டுவிட்டு அதன் கலெக்ஷனை ஆயிரம், ஐநூறு என வசூல் செய்து கொண்டு வருகிறோம்.
ஒரு ஏஜென்ட் ஒரு நாளில் 2000 லிட்டர் பால் விற்பனை செய்கிறார் என்றால் சாதாரணமாக லட்ச ரூபாய்க்குமேல் வசூல் செய்து இரவு கட்டுவதற்காக எடுத்து வருவோம். அதை மறித்து ஆவணம் காட்டு என்றால் எங்கே போவோம்? பால் வியாபாரத்துக்கு உரிய வரியை கட்டித்தான் வியாபாரம் செய்கிறோம். வசூல் பணத்திலும் ஆவணம் காட்டு என்றால் எங்கே போவது? இதுதான் எங்களுக்கு இருக்கும் பிரச்சினை.
பொதுமக்களை எடுத்துக்கொண்டால் ஒரு திருமணத்துக்கு 10 சவரன் நகை வாங்கச் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு 3 லட்சம் ரூபாய் தேவை என்றால் அதை சீட்டுப்போட்டு சிறுகச் சிறுகச் சேர்த்திருப்பார்கள். அவர்களை மடக்கி ஆவணம் காட்டு என்றால் என்ன செய்வார்கள்?
சமீபத்தில் ஒரு கச்சேரியில் பாடிவிட்டுத் வீட்டுக்கு திரும்பிய இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியிடம் மொத்தம் 51 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. உடனே ஆவணம் கொடு என பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டனர். பின்னர் கோயில் நிர்வாகம் மூலம் ரசீது காட்டி பணம் திரும்பப் பெறப்பட்டது.
இதுபோன்று பல உதாரணங்களைச் சொல்லலாம். பொதுமக்கள் யார், வியாபாரிகள் யார், அரசியல்வாதி யார் என்று பறக்கும் படையினருக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் சாதாரண பொதுமக்கள், வியாபாரிகளைச் சோதனையிடுவதைக் காட்டிலும் அரசியல்வாதிகளைச் சோதனையிட வேண்டும்.
உளவுத்துறை, நுண்ணறிவுத்துறை என பல துறைகள் காவல்துறையில் உள்ளன. அவர்கள் மூலம் யார் யாருக்கு நெருக்கம், யார் யார் மூலம் பணம் போகிறது என எளிதாக தகவலைக் கேட்டு வாங்கிவிட முடியும். அதை நடைமுறைக்குக் கொண்டு வரலாம்.
ஆர்.கே.நகரில் பணம் கொடுக்கும்போது கையுங்களவுமாக சிக்கியவர்கள் இப்போதும் அதே வேலையைத்தான் செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இதுவரை இந்த அரசியல்வாதி சிக்கினார், இவர் வாகனத்தில் இவ்வளவு பணம் எடுத்தோம், இந்த இடத்தில் வாக்காளர்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்கும்போது பிடித்தோம் என தேர்தல் அதிகாரிகள் சொல்லும் நிலை வர வேண்டும்'' என்கிறார் பொன்னுசாமி.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் சம்பந்தமே இல்லாத பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. திருமணம், மருத்துவமனை செலவு, வியாபாரம் என பல்வேறு சூழலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் எல்லா இடங்களிலும் உரிய ஆவணங்களோடு இருப்பது சாத்தியமற்றது. அதனால் ஆவணச் சரிபார்ப்புகளில் பொதுமக்களிடம் மாற்று முறைகளைக் கையாளுவது அவசர அவசியம். அதுவே மக்களின் நலன் சார்ந்த நடவடிக்கையாக கருதப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT