Published : 21 Mar 2019 04:13 PM
Last Updated : 21 Mar 2019 04:13 PM
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வாக்கு வங்கியை நம்பி களமிறங்கியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், திமுகவின் வலிமையான வேட்பாளரான கெளதம சிகாமணியை எதிர்கொள்கிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு உருவான புதிய மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி. எனினும் 1970களில் இரண்டு முறை கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இருந்தது.
கள்ளக்குறிச்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவே தமிழக அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உண்டு.
அதேசமயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக கட்சிகளுக்கும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரளவு ஆதரவு உண்டு.
2014 மக்களவைத் தேர்தல்
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக காமராஜ் வேட்பாளர் காமராஜ், 5,33,383 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மணிமாறன் 3,09,876 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் ஈஸ்வரன் 1,64,183 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் தேவதாஸ் 39,677 வாக்குகளும் பெற்றனர்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளில் திமுகவும், ஆத்தூர் (எஸ்சி), கெங்கவல்லி (எஸ்சி), கள்ளக்குறிச்சி (எஸ்சி), ஏற்காடு (எஸ்டி) ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அதேசமயம் திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி போட்டியிடுகிறார். பிரச்சார பலம், பண பலம், அரசியல் பாரம்பரியம் என பலமான வேட்பாளரான கெளதம சிகாமணியை எல்.கே.சுதீஷ் எதிர்கொள்கிறார்.
நேரடிப் போட்டி
இந்தத் தொகுதியைப் பொறுத்தரையில் தேமுதிக - திமுக இடையே நேரடிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லாததால் இருவரிடையே மட்டுமே நேரடிப் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
அதிமுகவின் வலிமையான வாக்கு வங்கியையும், பாமகவின் வாக்குகள் எல்.கே.சுதீஷூக்கு பலம் சேர்க்கக்கூடும். ஆனால் திமுகவுக்கு மிக பலமான வாக்கு வங்கி உண்டு. அத்துடன் பொன்முடியின் மகன் என்பதால் தனிப்பட்ட செல்வாக்கும் காணப்படுகிறது. குறிப்பாக ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 17 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதும் திமுக கூட்டணிக்கு பலமாகும். அதேசமயம் ஏற்காடு மற்றும் ஆத்தூர் தொகுதிகளில் அதிமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உண்டு. ஏற்காடு, ஆத்தூர் தொகுதிகளில் பாமகவும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகளில் சுமார் 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் இதைவிடக் குறைவான வாக்குளை மட்டுமே பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகள் எல்.கே.சுதீஷூக்கு பலமாக இருந்தாலும், திமுகவின் பலமான வாக்கு வங்கியையும், வலிமையான வேட்பாளரையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சுதீஷ் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT