Published : 23 Mar 2019 08:49 AM
Last Updated : 23 Mar 2019 08:49 AM

ரூ.50 லட்சம்.. 12 புல்லட்.. வெளிநாட்டு சுற்றுலா!- ‘ஜெயிக்க வையுங்க.. பரிசுகளை அள்ளுங்க’: வேட்பாளர்கள் அறிவிப்பால் நிர்வாகிகள் உற்சாகம்

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். திமுகவில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

கடந்த 2014 மக்களவைத்  தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், 3.24 லட்சம் வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை மீண்டும் கேட்டுப் பெற்றுள்ள அவர்  வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்.

அதேபோல, திமுக சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்தின் வெற்றியானது துரைமுருகனுக்கு கவுரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால், தனது மகனின் வெற்றிக்காக அனைத்துவிதமான அஸ்திரங்களையும் வீச துரைமுருகன் தயாராகி வருகிறார்.

துரைமுருகன், ஏ.சி.சண்முகம் இருவரும் ஏறக்குறைய சமகால அரசியல்வாதிகள் என்பதுடன் இருவருமே எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தவர்கள். எம்ஜிஆர் மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்கள். இவர்கள் இருவரும் வேலூர் ‘கோட்டையை’ கைப்பற்ற தீவிரமாக களமிறங்கியுள்ளதால், இத்தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் வெளிப்படையாகத் தெரிந்தது.

வேலூரில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ‘‘கதிர்ஆனந்தின் வெற்றிக்காக அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி நிர்வாகிகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதற்கு போட்டியாக ஏ.சி.சண்முகமும் ‘‘அதிக வாக்குகள் பெற்றுத் தரும் தொகுதி நிர்வாகிகள் 12 பேருக்கு புல்லட், வட மாநிலங்கள் மற்றும் 2 வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்’’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜெகத்ரட்சகன் ரூ.1 கோடி பரிசு

அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இவர்களையும் மிஞ்சிவிட்டார். ‘‘அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பேரவைத் தொகுதிக்கு 1 கோடி பரிசு’’ என்று அறிவித்துள்ளார்.

‘‘ஏ.சி.சண்முகம் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியானதுமே, கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த சுறுசுறுப்புடன் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். இப்போது, பரிசுகளையும் அறிவித்திருப்பது நிர்வாகிகள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்கின்றனர் அதிமுகவினர்.

திமுகவினர் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் இருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்ற தீவிரமாக வேலை செய்து வருகிறோம். பரிசுத் தொகை அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களைப் பார்த்து ஏ.சி.சண்முகம் பரிசுத் தொகை, சுற்றுலா அறிவிப்பு வெளியிட்டிருப்பது போட்டியை அதிகரித்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x