Published : 27 Mar 2019 09:29 AM
Last Updated : 27 Mar 2019 09:29 AM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென்காசி தனி தொகுதி வேட்பாளர் முனீஸ்வரன் விண்ணப்பம் இல்லாமலும், போதிய டெபாசிட் தொகையின்றியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து தேர்தல் அதிகாரியை அதிர வைத்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்தவர் டெபாசிட் தொகை செலுத்த தேர்தல் அதிகாரியிடமே ரூ.300 கடன் கேட்டது நகைப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென் காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பூ.முத்துராமலிங் கத்திடம் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென்காசி தொகுதி மாற்று வேட்பாளர் வெங்கடேஸ்வரன் மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அவர் அளித்த டெபாசிட் தொகையை எண்ணிப் பார்த்ததில், 300 ரூபாய் குறைவாக இருந்தது.
கடன் தருமாறு கெஞ்சல்
அத்தொகையை சேர்த்து தருமாறு தேர்தல் அதிகாரி அவரிடம் தெரிவித்தார். அதற்கு வெங்கடேஸ்வரன், ‘என்னிடம் இப்போது வேறு பணம் எதுவும் இல்லை. எனக்காக நீங்களே 300 ரூபாய் சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள்.
மனு தாக்கல் செய்த பிறகு நான் வீட்டுக்கு சென்று, பணத்தை எடுத்து வந்து உங்களுக்கு தருகிறேன்’ என்று கூறி அதிர வைத்தார்.
அதற்கு அதிகாரி, ‘‘அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. யாரிடமாவது பணத்தை வாங்கி கொடுங்கள் என்று கூறி, திருப்பி அனுப்பினார். இதையடுத்து வெளியே சென்ற வெங்கடேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென்காசி தொகுதி அதிகாரபூர்வ வேட்பாளர் முனீஸ்வரனிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து, மனு தாக்கல் செய்தார்.
விண்ணப்பமின்றி வருகை
அவரைத் தொடர்ந்து, முனீஸ்வரன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தேர்தல் அதிகாரியிடம் பிரமாண பத்திரத்தை மட்டும் அவர் அளித்தார். அவரிடம், ‘வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பம் எங்கே’ என்று அதிகாரி கேட்டதற்கு, ‘‘விண்ணப்பம் நீங்கள் தானே தர வேண்டும்” என்று கூறினார்.
முதலில் விண்ணப்ப படிவத்தை வாங்கி, நிரப்பிக் கொண்டு வருமாறு கூறி அவரை அதிகாரி திருப்பி அனுப்பினார். அதன் பின்னர், விண்ணப்ப படிவத்தை வாங்கி, அவசர அவசரமாக நிரப்பிக் கொண்டுவந்து அவர் கொடுத்தார். ஆனால், அவரிடமும் டெபாசிட் தொகை குறைவாக இருந்தது. உடன் வந்தவர்களி டம் மீதி பணத்தை பெற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வழக்கமாக, வேட்பு மனு தாக்கலின் போது சுயேச்சை வேட்பாளர்கள் தான் இப்படி ஏடாகூடமாக நடந்து காமெடி செய்வார்கள்.
ஆனால் ஒரு பிரபலமான கட்சியின் வேட்பாளர்களே அடிப்படை புரிதலின்றி மனுதாக் கல் செய்ய வந்தது தேர்தல் அதிகாரி மற்றும் ஊழியர் களை நகைப்புக்குள்ளாக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT