Published : 29 Mar 2019 07:15 AM
Last Updated : 29 Mar 2019 07:15 AM
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வாங்கிக் கொடுத்தது நான்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து, பெரம்பலூர் வானொலி திடலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
நாட்டில் பல்வேறு விதமான கொள்ளையர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிடும் ஒருவர் ஒரு கல்விக் கொள்ளையர். அவரது கல்விக் கொள்ளையை எதிர்த்து பாமக வழக்கு தொடர்ந்து அதன் காரணமாக அவர் சிறை சென்றார். அதனால் அவருக்கு பாமக என்றால் பிடிக்காது.
அதிமுகவுடனான கூட்டணி இயற்கையான கூட்டணி. சகோதர உணர்வுடன் தொண்டர்கள் பழகுவார்கள். திமுகவுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம். அவர்கள் மாலை போட்டு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்துவிடுவார்கள்.
பின்தங்கிய இந்த தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றால் ஆளுங்கட்சியான அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வாங்கிக் கொடுத்தது நான்தான். ஒரு கூட்டத்தில் நானும் கருணாநிதியும் பேசிக்கொண்டிருந்தபோது நீங்களே எல்லா சுமையையும் சுமக்க வேண்டாம். உங்களது பொறுப்பை கொஞ்சம் ஸ்டாலினிடம் கொடுங்கள் என்றேன். அடுத்த மாதமே ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார்.
இந்தத் தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்த ஊர்க்காரரான சாதிக்பாட்சா என்பவரின் நினைவு தினத்துக்கு விளம்பரம் கொடுத்த அவரது மனைவியை மிரட்டுபவர்கள் அவர்கள். திமுகவுக்கு வாக்களிப்பதும், புராண கதையில் வரும் பத்மாசூரன் போல தனது தலையில் கை வைத்து தன்னையே அழித்துக் கொள்வதும் ஒன்றுதான்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT