Published : 19 Mar 2019 10:24 AM
Last Updated : 19 Mar 2019 10:24 AM
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மறைந்த முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜோசப் லூயிஸ் ஆகியோர் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பை பெறுவதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இத்தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்புவும் ஆர்வம் காட்டுவதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்திக்கு கட்சியின் மாநிலத் தலைவர் வழியாக நேற்று ஒரு தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், திருச்சி தொகுதியை காங்கிரஸுக்கு பெற்றுத் தந்த ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மக்களவைத் தொகுதியில் 4 முறை வென்ற மறைந்த எல்.அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸை வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
அவர் நிறுத்தப்பட்டால் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாகமாக தேர்தல் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.ஜவஹரிடம் கேட்டபோது, “கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் தேர்தல் பணியாற்றுவோம். அதேவேளையில், ஜோசப் லூயிஸை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளோம்” என்றார்.
இதுகுறித்து திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கட்சித் தலைமைக்கு ரகசியமாக பரிந்துரைக்க வேண்டும். மாநகர் மாவட்டம் சார்பில் விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது சரியானது அல்ல. இது, தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உறுதிசெய்யப்பட்டுவிட்டார். 2 நாட்களில் கட்சித் தலைமை அறிவிக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT