Published : 25 Mar 2019 06:03 AM
Last Updated : 25 Mar 2019 06:03 AM
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விவகாரமாக ஸ்டெர்லைட் பிரச்சினையும், துப்பாக்கிச் சூடு சம்பவமும் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பை தொடங்கி விட்டனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை களத்தில் உள்ளார். கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அமமுக சார்பில் போட்டியிடும் ம.புவனேஸ்வரன் செயல்வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட ஆதரவு திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.எஸ்.பொன் குமரன் அறிவிக்கப்பட்டு அவரும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் இந்த தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக ஸ்டெர்லைட் ஆலை விவகாரமும், துப்பாக்கிச்சூடு சம்பவமும் இடம்பெற்றுள்ளன.
திமுக வேட்பாளர் கனிமொழி, தான் பேசும் நிகழ்ச்சிகளில், ஸ்டெர்லைட் விவகாரத்தை மறக்காமல் குறிப்பிடுகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும்தான் காரணம் என அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
பகிரங்க குற்றச்சாட்டு
நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கனிமொழி, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை அவதூறாக பேசியதமிழிசைதான் இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தமிழிசை, “திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையை சேர்க்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
பாஜக சார்பில் தனியாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்இடம்பெறுமா? என செய்தியாளர்கள் கேட்ட போது, “பொறுத்திருந்து பாருங்கள்” என தமிழிசை பதிலளித்தார்.
அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனோ, “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்துக்கு அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே காரணம். நாங்கள் வெற்றி பெற்றால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம்” என்று பேசி வருகிறார்.
தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டெர்லைட் பற்றி பேச தவறுவதில்லை. தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு நீதி கேட்டு வருவதாக தெரிவிக்கிறார்.
தூத்துக்குடி தொகுதியில் இம்முறை வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் பிரச்சினையாக ஸ்டெர்லைட் விவகாரமும், துப்பாக்கிச் சூடு சம்பவமும் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT