Published : 28 Mar 2019 09:08 AM
Last Updated : 28 Mar 2019 09:08 AM
ஆயிரம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரை உள்ளடக்கிய தொகுதி இது. உத்திரமேரூர் பகுதியில் குடவோலை முறையில் 9-ம் நூற்றாண்டிலிருந்து 16-ம் நூற்றாண்டு வரை தேர்தல் நடைபெற்றதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு. சர்வதேசச் சுற்றுலா நகரமான மாமல்லபுரம் இந்தப் பகுதியில் உள்ளது. பண்டைய தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்துக்குக் காஞ்சிபுரம் தலைநகராக இருந்துள்ளது. காஞ்சிபுரம்(தனி), உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர்(தனி), செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மக்களவைத் தொகுதி இது.
பொருளாதாரத்தின் திசை: விவசாயமும், பட்டுத் தொழிலும் பிரதானத் தொழில்கள். வட இந்தியாவின் பனாரஸ் பட்டுபோல் தென்னிந்தியாவின் காஞ்சிபுரம் பட்டு உலகப் புகழ்பெற்றது. சுற்றுலாவும் மீன்பிடித் தொழிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கும் மாமல்லபுரத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தற்போது திருப்போரூரைச் சுற்றியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைகளில் மனை வணிகம் சூடுபிடிக்கிறது. தொழில் நிறுவனங்களும் உருவாகிவருகின்றன. மறைமலைநகர் தொழிற்பேட்டை, மகேந்திரா சிட்டி போன்ற இடங்களில் அதிகத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: சென்னையையொட்டி உள்ள நகரம் என்பதால் விலைவாசி கடுமையாக அதிகரித்துவருகிறது. ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றிப் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருப்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறிவருகின்றனர். மக்கள் அடர்த்தி அதிகம். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 892 பேர் வசிக்கிறார்கள். போலிப் பட்டு உற்பத்தியும் விற்பனையும் பட்டு நெசவாளர்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாய சாகுபடிப் பரப்புகள் குறுகிவருகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவருகிறது. போக்குவரத்து நெருக்கடி பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
நீண்ட காலக் கோரிக்கைகள்: பாலாற்றில் பல இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும், சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து ஒலிக்கின்றன. 2012-ல் பட்டுப் பூங்கா அமைக்க 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தமிழக அரசால் ரூ.83.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், ஆரம்ப கட்டத்திலேயே அந்தப் பணிகள் உள்ளன. மாமல்லபுரத்துக்கு இன்னும் பேருந்து நிலையம்கூட இல்லை. காஞ்சிபுரத்துக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேறவில்லை. கடல் அரிப்பைத் தடுக்கவும், தங்கள் பாதுகாப்புக்கும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
ஒரு சுவாரஸ்யம்: தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீழ்த்த முடியாத திராவிடக் கட்சிகளின் அரசியல் வேர் பிடித்தது காஞ்சிபுரத்திலிருந்துதான். திமுகவை ஆரம்பித்த பிறகு 1957 தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு வென்றார் அண்ணா. எனினும், 1962 தேர்தலில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. சாதிக் கணக்குகள் பார்க்காமல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டாமல் செயலாற்றியவர் அண்ணா. அவரது நேர்மையால் அதிருப்தியடைந்தவர்கள் அவரது தோல்விக்கு வழிவகுத்தார்கள் என்கிறது அரசியல் வரலாறு!
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர் சமூகத்தினர் இங்கு அதிகம். இத்தொகுதியில் 35% -க்கும் அதிகமானோர் இந்தச் சமூகத்தினர்தான் என்கிறார்கள். பட்டியலினத்தவர்களும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். முதலியார், யாதவர் உள்ளிட்டோரும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தனித் தொகுதி என்பதால் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளனர். கட்சி, வேட்பாளர், கடந்த காலச் செயல்பாடு ஆகியவை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணிகளாக இருக்கும்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியாக இருந்தபோது ஐந்து முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் தலா மூன்று முறையும், பாமக இரண்டு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1984, 1989, 1991 என மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுக வென்றுள்ளது. காஞ்சிபுரம் மக்களவை தனித் தொகுதி 2008 தொகுதி மறுசீரமைப்பின்போதுதான் உருவாக்கப்பட்டது. இரண்டு முறைதான் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டிருக் கிறது. 2009-ல் காங்கிரஸின் பெ.விசுவநாதன் வென்றார். 2014 தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல் வெற்றிபெற்றார்.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 16,19,318
ஆண்கள் 7,94,839
பெண்கள் 8,24,316
மூன்றாம் பாலினத்தவர்கள்: 163
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 88.47%
முஸ்லிம்கள்: 4.35%
கிறிஸ்தவர்கள்: 6.42%
இதர சமூகத்தினர் 0.76%
எழுத்தறிவு எப்படி?
ஆண்கள் 79.02%
பெண்கள் 67.05%
கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT