Published : 07 Mar 2019 10:20 AM
Last Updated : 07 Mar 2019 10:20 AM

திண்டுக்கல் தொகுதியில் 35 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் திமுக

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக தனது கூட்டணிக் கட்சியைப் பலமுறை வெற்றிபெறச் செய்துள்ளது. இருப்பினும் திமுக நேரடியாகப் போட்டியிட்டபோது வெற்றிபெற முடியாதநிலை ஏற்பட்டது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் தொகுதியில் தடம் பதிக்க வேட்பாளரை தேடும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1952 முதல் தேர்தல் நடைபெற்று வந்துள்ளது. தொகுதி மறுவரையறைக்கு முன்பு திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறுவரையறைக்குப் பின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டன.

1952 மக்களவைத் தேர்தல் முதல் இதுவரை திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 6 முறையும், த.மா.கா. ஒருமுறையும், அதிமுக 8 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1980 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் கே.மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1984 வரை எம்பியாக இருந்துள்ளார். அதன் பிறகு, இந்தத் தொகுதியில் திமுக பலமுறை போட்டியிட்டும் ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை. ஒருமுறை நடிகர் சந்திரசேகர் திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

1980-க்குப் பிறகு 9 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் திமுக வெற்றி பெற்று மக்களவையில் தடம் பதிக்கவேயில்லை. இதனால் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை ஒதுக்க பலன் கிடைத்தது. 2004 முதல் 2014 வரை அடுத்தடுத்து வெற்றி பெற்று காங்கிரசை சேர்ந்த என்.எஸ்.வி.சித்தன் திண்டுக்கல் தொகுதி எம்.பி.யாக இருந்தார். கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல் திமுக போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதிமுகவைச் சேர்ந்த உதயகுமார் வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் இந்தமுறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் வேட்பாளரைத் தேடும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் திண்டுக்கல் தொகுதியைக் கேட்காத நிலையில் திமுகவே இத்தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இந்த முறையாவது திண்டுக்கல் தொகுதியின் பிரதிநிதியாக திமுகவைச் சேர்ந்தவர் மக்களவையில் தடம் பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x